அமலாக்க துறை வழக்கில் ஜாபருக்கு நிபந்தனை ஜாமின்
சென்னை : சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதை பொருட்கள் விற்பனை வாயிலாக கிடைத்த பணத்தை, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக கூறி, ஜாபர் சாதிக் மீது, அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு ஜூன் 26ல், அவரை கைது செய்தது. பின், ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீமும், கடந்தாண்டு ஆகஸ்ட் 13ல் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இருவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி சுந்தர் மோகன் முன் நடந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபுடுகுமார் ராஜரத்தினம், கே.டி.சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் வாதிட்டனர்.
பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அரசு தரப்பால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கில் 20 பேர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்; 19 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் சிலருக்கு, 'சம்மன்' அனுப்பப்படாததால், விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்ற, மனுதாரர்கள் தரப்பு வாதம் ஏற்கப்படுகிறது.
எனவே, மனுதாரர்கள் இருவரும், 5 லட்சம் ரூபாய் சொந்த ஜாமின், அதே தொகைக்கான இருநபர் ஜாமின் உத்தரவாதத்தை, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்; தவறினால், ஜாமின் ரத்து செய்யப்படும்; நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல், மொபைல் போன் எண்ணை மாற்றக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது