ஜார்க்கண்டில் 'என்கவுன்டர்' 8 நக்சல்கள் சுட்டுக்கொலை

ராஞ்சி : ஜார்க்கண்டில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், தலைக்கு ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்த நக்சல் அமைப்பின் முக்கிய பிரமுகர் உட்பட எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் உள்ள லால்பானியா என்ற பகுதியில், நக்சல்களின் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
தேடுதல் வேட்டை
இதன்படி, லால்பானியாவில் உள்ள லுகு மலைப்பகுதியில், நேற்று அதிகாலை சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 'கோப்ரா' படை வீரர்களுடன் இணைந்து, போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்புக்கு இடையே நீண்ட நேரம் நடந்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த எட்டு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். உயிரிழந்தவர்களில், நக்சல் அமைப்பின் முக்கிய பிரமுகர் பிரயாக் மஞ்சி, அரவிந்த் யாதவ் உள்ளிட்டோர் அடங்குவர்.
இதில், பிரயாக் மஞ்சி பற்றி தகவல் கொடுப்போருக்கு, ஒரு கோடி ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
பறிமுதல்
ஜார்க்கண்டில் நடந்த பல்வேறு தாக்குதல்களில், பிரயாக் மஞ்சி, அரவிந்த் யாதவுக்கு தொடர்பு உள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஜார்க்கண்ட் டி.ஜி.பி., அனுராக் குப்தா கூறுகையில், ''வடக்கு சோட்டா நாக்பூர் பகுதியில் நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டனர்.
''சாய்பாசா பகுதியில் மட்டுமே நக்சல்கள் உள்ளனர். அடுத்த 20 நாட்களுக்குள் அவர்களையும் அழித்து விடுவோம். அதற்கு முன்னதாகவே சரணடைந்தால் அவர்களுக்கு நல்லது,'' என்றார்.
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள டோய்னார் - பர்சேகர் கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு பாதுகாப்பு பணிக்காக, சத்தீஸ்கர் ஆயுதப்படை வீரர்கள் நேற்று சென்றனர். அப்போது, நக்சல்கள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி மீது, ஆயுதப்படை வீரர் மனோஜ் பூஜாரி, 26, தவறுதலாக கால் வைத்தார். இதில் கண்ணி வெடி வெடித்து சிதறியதில், அவர் உயிரிழந்தார். சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது