ஹிந்தியை கட்டாய பாடமாக்க மஹாராஷ்டிரா மொழிக்குழு எதிர்ப்பு

5


புனே: மஹாராஷ்டிரா பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என்ற அரசின் முடிவுக்கு, மாநில மொழி ஆலோசனை குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

ஆலோசனை



இங்கு, வரும் கல்வி ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அறிமுகமாகிறது.

இதன்படி, 1 - -5 வகுப்புகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் என்றும், மராத்தி மற்றும் ஆங்கிலவழி பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தர வேண்டும் என்றும், மாநில அரசு உத்தரவிட்டது.

இந்த முடிவுக்கு, மாநில கல்வி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, முதல்வர் தேவேந்திர பட்னவிசுக்கு குழுவின் தலைவர் லட்சுமிகாந்த் தேஷ்முக் எழுதிய கடிதம்:

மொழி விவகாரங்களில் ஆலோசனை அளிப்பதற்காக, 'மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்' என்ற குழு அமைக்கப்பட்டது. ஆனால், மாநிலத்தில் ஹிந்தி கட்டாயம் என்ற விஷயத்தில், குழுவின் ஆலோசனை மற்றும் கருத்துகள் கேட்கப்படவில்லை.

தேசிய கல்வி கொள்கையின்படி, தாய்மொழி வாயிலாகவே கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்; எந்தவொரு மொழியும் கட்டாயம் கிடையாது. எனவே, மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது சரியல்ல.

உண்மை இல்லை



மாணவர்களுக்கான கல்வியில் எந்த நிலையிலும் ஹிந்தி கட்டாயமாக்கப்படக் கூடாது. முடிந்தவரை மிகக் குறைவாக ஹிந்தியை பயன்படுத்தும் கொள்கையை ஏற்க வேண்டும்.

ஹிந்தி என்பது அறிவுக்கான மொழியோ, வேலைவாய்ப்பு, வருமானம், கவுரவத்தை தரும் மொழியோ அல்ல. எனவே, ஹிந்தி கட்டாயம் என்ற முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நேற்று கூறியதாவது:



மஹாராஷ்டிராவில், கட்டாயமாக மராத்தியில் தான் கல்வி கற்பிக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

மராத்திக்கு பதில் ஹிந்தி கட்டாயம் என எதிர்க்கட்சியினர் கூறுவதில் உண்மை இல்லை.

இரண்டு இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளை கற்க, தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது. நம் மாநிலத்தில் மராத்தி கட்டாயம்.

இதையடுத்து ஹிந்தி, தமிழ், மலையாளம், குஜராத்தி தவிர வேறெந்த மொழியையும் தேர்ந்தெடுக்க முடியாது. அப்படி செய்தால் அவற்றுக்கு ஆசிரியர்கள் கிடையாது.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement