1.50 கோடி பேருக்கு இலவச 'ஏசி' திட்டமா? ஏமாற வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி: 'பிரதமர் மோடி ஏசி யோஜனா' என்ற பெயரில் 1.50 கோடி இலவச 'ஏசி' வழங்கப்போவதாக வெளியாகும் போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
பற்றாக்குறை
வெயில் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு சார்பாக இலவசமாக ஏசி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் தகவல்கள் வெளியாகின.
'இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்' என்ற தலைப்புடன் மிக வேகமாக பரவிய அதில் கூறப்பட்டுள்ளதாவது:
காற்றில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், மின்சார தேவை மற்றும் மக்களின் மின் கட்டணங்களை குறைக்கும் நோக்கத்திலும் '5 ஸ்டார் ஏசி'யை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளது.
'பிரதமர் மோடி ஏசி யோஜனா -2025' என்ற பெயரில், மே மாதம் அறிமுகமாகும் இந்த திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்யலாம். யமுனா பவர் லிமிடெட் என்ற வலைதளத்துக்கு சென்று பதிவு செய்தால், 30 நாளில், இலவச ஏசி கிடைக்கும்.
இந்த திட்டத்துக்காக, 1.50 கோடி ஏசி தயாராக இருப்பதால், நம் நாட்டில் பெரிய அளவில் ஏசி, பற்றாக்குறை ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது மோசடியான தகவல் என்றும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டத்தின் கீழ், 1.50 கோடி ஏசி வழங்கப்படுவதாக பரவும் தகவல்கள் போலியானவை.
'மத்திய மின்துறை அமைச்சகத்தில் இருந்து இதுபோன்ற எந்தவித திட்டமும் அறிவிக்கப்படவில்லை' என கூறப்பட்டுள்ளது.
போலி செய்தி
மேலும், 'பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களை சேகரிப்பதற்காக, இதுபோன்ற போலியான பதிவுகள் பயன்படுத்தப்படலாம். எனவே, தெரியாத இணைப்புகளில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்.
'இது ஆன்லைன் மோசடிகளுக்கு வழி வகுக்கும். எனவே, போலி செய்திகளை பகிர வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது
-
ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி