அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா கடும் எச்சரிக்கை

பீஜிங்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டிரம்ப் பதவியேற்ற பின், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதே அளவு வரி விதிக்கும் 'பரஸ்பர வரி விதிப்பு' முறையை கொண்டு வந்தார்.

இறக்குமதி



இதில், நம் நாடு உட்பட பல நாடுகள் பாதிக்கப்படும் நிலையில், சீனா நேரடியாகவே மோதுவதோடு, அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீதம் வரை வரி விதித்தது.

உலகளாவிய வர்த்தக போரை துவங்கியுள்ள டிரம்ப் ஆத்திரமடைந்து, சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரியை உயர்த்தினார்.

அதே நேரத்தில், 70 நாடுகள் மீதான வரி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததோடு, அந்த நாடுகளில் அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் வகையில், தனித்தனியே ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார். சீனாவுடன் அந்த நாடுகள் வர்த்தகம் செய்வதை தடுக்கும் விதமாக, அவற்றுக்கு நெருக்கடியையும் அமெரிக்கா கொடுக்கிறது.

தற்போது ஜப்பான், 'ஆசியான்' அமைப்பில் உள்ள நாடுகள் போன்றவை சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் லாபகரமான வர்த்தகத்தை நடத்தி வருகின்றன.

சமீபத்தில், ஆசியான் நாடுகளான வியட்நாம், மலேஷியா, கம்போடியா ஆகியவற்றுக்கு சீன அதிபர் சென்று வந்தார்.

இந்த சூழலில், தன்னுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளை, சீனாவுடன் வர்த்தகம் செய்யக் கூடாது என அமெரிக்கா நெருக்கடி கொடுப்பதால், சீனா ஆவேசமடைந்து உள்ளது.

சீன வர்த்தக அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

பரஸ்பரம் என்ற பெயரில் அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் தான்தோன்றித்தனமாக வரிகளை விதித்து, 'பரஸ்பர வரி' பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது.

சர்வதேச வர்த்தகமானது, காட்டுத்தனமான சட்டத்துக்கு திரும்பி, எளியோரை வலிமையானவர்கள் வேட்டையாடினால், அனைத்து நாடுகளுமே பாதிக்கப்படும். அமெரிக்கா உடனான வர்த்தக மோதலை தீர்க்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினரையும் சீனா மதிக்கிறது.

உரிமை



சர்வதேச அளவில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட, அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. அதே நேரத்தில், சீனாவுக்கு தன்னுடைய சட்டப்பூர்வமான உரிமை மற்றும் நலனை பாதுகாக்கும் திறனும் இருக்கிறது.

சீனாவின் நலன்களை பலி கொடுத்து, அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதை மிகக் கடுமையாக எதிர்க்கிறோம். அது போன்ற சூழல் ஏற்பட்டால், அதற்கேற்ற எதிர் நடவடிக்கைகளை சீனா உறுதியாக எடுக்கும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சீனா பதிலடி கொடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement