தேர்தல் கமிஷன் பணிந்து விட்டது அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

பாஸ்டன்: ''மத்தியில் ஆளும் கட்சிக்கு, தேர்தல் கமிஷன் பணிந்து விட்டது. இதனால் தேர்தல் முடிவுகளில் அது சமரசம் செய்துள்ளது,'' என, அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாஸ்டன் நகரில் நடந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தேர்தல் கமிஷன் சமரசம் செய்துள்ளது. அதன் செயல்பாடுகளில் சில தவறுகள் தென்படுகின்றன. மஹாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அப்போது, மாலை 5:30 மணிக்கு ஓட்டுப் பதிவு சதவீதம் குறித்த ஒரு தகவலை தேர்தல் கமிஷன் அளித்தது. ஆனால், இரண்டு மணி நேரத்தில், அந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
அதாவது, இரண்டு மணி நேரத்தில், 65 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர். இதற்கு சாத்தியமே இல்லை. இதில் இருந்து தேர்தல் கமிஷன், மத்திய அரசுக்கு பணிந்து, சமரசம் செய்துள்ளது தெளிவாக தெரிகிறது. இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்புறவு வலுவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன்பும், மஹாராஷ்டிரா தேர்தல் ஓட்டு சதவீதம் குறித்து ராகுல் பல முறை புகார் கூறியுள்ளார். இதற்கு தேர்தல் கமிஷனும் விளக்கம் கொடுத்துள்ளது. 'எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை' என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
'ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், தேர்தல் முகவர்கள் முன்னிலையில்தான் ஓட்டுப் பதிவு நடக்கிறது. அதுபோல, அவர்கள் முன்னிலையில்தான் ஓட்டுகளும் எண்ணப்படுகின்றன. ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய முடியாது' என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை முடிந்து, அனைத்து தகவல்களும் முழுமையாக பெறப்பட்டு, தொகுக்கப்பட்டு அளித்ததால்தான், ஓட்டு சதவீதம் குறித்த இடைவெளி இருந்ததாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், வழக்கம் போல் வெளிநாட்டிற்கு சென்று, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
'கடந்த லோக்சபா தேர்தலில், 100 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ராகுல் என்ன காரணம் கூறப்போகிறார்?' என்றும், பா.ஜ., தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ராகுலின் பேச்சு குறித்து, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:நம் நாடு குறித்தும், அமைப்புகள் குறித்தும் இழிவுபடுத்தும் வகையில் வெளிநாடுகளில் பேசுவதை ராகுல் தொடர்ந்து செய்து வருகிறார். இது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும். மஹாராஷ்டிரா தேர்தலில் அடைந்த தோல்வி, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மோசடியில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். தவறு செய்துள்ளதால், சுதந்திரமாக செயல்படும் விசாரணை அமைப்புகளின் விசாரணைகளில் இருந்து அவர் தப்பிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.












மேலும்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது