பழுதடைந்து நிற்கும் பி.எம்.டி.சி., பஸ்கள் அதிகாரிகள், பொதுமக்களுக்கு தலைவலி

பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்கள் பழுதடைந்து, நடுரோட்டில் நிற்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பது, அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது. எட்டு மாதங்களில் 220க்கும் மேற்பட்ட பஸ்கள் பழுதடைந்து நடுரோட்டில் நின்றன.

பெங்களூரின் பெரும்பாலான மக்கள், தங்களின் போக்குவரத்துக்கு பி.எம்.டி.சி., பஸ்களையே நம்பியுள்ளனர். தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த பஸ்கள், அவர்களுக்கு அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. செல்லும்போதே, நடு வழியில் பழுதடைந்து நிற்கின்றன.

லட்சக்கணக்கான கி.மீ., ஓடிய, பழைய இரும்பு பொருட்கள் கடைக்கு அனுப்ப வேண்டிய பஸ்கள், பயணியர் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் ஓடும் போதே, பிரேக் பழுதடைகிறது. ஓட்டுநர்கள் கடைகளின் மீது, பாலங்களின் மீது மோதி பஸ்சை நிறுத்துகின்றனர்.

தினமும் காலையில் டிப்போவில் இருந்து, பஸ்களை வெளியே எடுப்பதற்கு முன்பு, பஸ்சின் நிலை எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதை செய்ய தவறுவதால், மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டியுள்ளது.

கடந்த எட்டு மாதங்களில், பிரேக் பிடிக்காதது, தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால், 220க்கும் மேற்பட்ட பஸ்கள், நடு ரோட்டிலேயே நின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

'பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, அனைவரும் பி.எம்.டி.சி., பஸ்களை பயன்படுத்துங்கள்' என, அரசு வேண்டுகோள் விடுக்கிறது. 'பழுதடைந்து நடுரோட்டில் நிற்கும் பஸ்சில், எப்படி பயணிப்பது?' என, பொது மக்கள் காட்டமாக கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement