திருச்சி அருகே வாலிபர் எரித்து கொடூர கொலை

திருச்சி: திருச்சி அருகே, வீட்டின் வெளியே கட்டிலில் துாங்கிய வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி.

இவர்களுக்கு கோபிநாத், 26, என்ற டிப்ளமா படித்த மகனும், கவுசி என்ற மகளும் உள்ளனர். பாலசுப்பிரமணியன், நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்; கவுசி சென்னையில் படிக்கிறார்.

கோபிநாத் தன் தாயுடன் வேலம்பட்டியில் தோட்டத்து வீட்டில் தங்கி, விவசாய வேலைகளை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் வீட்டின் வெளியே கட்டிலில் துாங்கினார். அவரது தாய், வீட்டின் உள்ளே துாங்கினார். நேற்று அதிகாலை, செல்வி எழுந்து வெளியே வந்தபோது, கட்டிலோடு மகன் கோபிநாத் எரிந்து கொண்டிருப்பதை கண்டு கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வந்து தீயை அணைப்பதற்குள், கோபிநாத், உடல் கருகி இறந்து விட்டார்.

போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். இறந்த கோபிநாத்தின் கழுத்தில், இரு வெட்டுக் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்ட பின், கட்டிலோடு சேர்த்து, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

Advertisement