மதுரை இளம் பெண் எரித்து கொலை நத்தம் காதலன் கைது

கன்னிவாடி : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனப்பகுதியில் எரிந்த நிலையில் இருந்த மதுரை சமயநல்லுார் பெண் கொலை வழக்கில் நத்தத்தைச் சேர்ந்த அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

கன்னிவாடி வனப்பகுதி அமைதிச்சோலை அருகே 60 அடி ஆழ ஆதிமூலம் நீரோடை உள்ளது. ஏப்., 13 அங்கு பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்த இளம் பெண்ணின் உடலை கன்னிவாடி போலீசார் மீட்டனர். சிதைந்த முகம், ஜீன்ஸ் பேன்ட், வலது கையில் ஆறு விரல் அடையாளங்களை கொண்டு போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவு, அலைபேசி பயன்பாடுகள் போலீசாருக்கு கைகொடுத்தன. அதனடிப்படையில் நத்தம் கைலாசப்பட்டியைச் சேர்ந்த பிரவீனை 22, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது: சமயநல்லுார் தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆதரவற்ற பெண் மாரியம்மாள் 20, மங்கையர்க்கரசி கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்தவர்.

திண்டுக்கல்லில் உள்ள ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அங்கு உடன் பணிபுரிந்த பிரவீனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருமுறை கருக்கலைப்பு செய்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மாரியம்மாள் பிரவீனை வற்புறுத்தினார்.

ஏப்., 12ல் அமைதிச்சோலை நீரோடை பகுதிக்கு டூவீலரில் சென்ற இருவரும் சந்தோஷமாக இருந்துள்ளனர். அதன் பின் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரவீன் கீழே தள்ளியதில் மாரியம்மாள் இறந்தார். அவரது உடலை அங்கேயே விட்டு சென்ற பிரவீன் ஏப்., 13ல் மீண்டும் அங்கு சென்றார். மாரியம்மாள் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி விட்டார் என்றார். பிரவீனின் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement