பாம்பன் புதிய ரயில் பாலம் ஏப். 24ல் திறக்க முடிவு தினமலர் செய்தி எதிரொலி

ராமேஸ்வரம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பாம்பன் ரயில் பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் விசைப்படகுகள் கடந்து செல்ல ஏப்., 23, 24ல் புதிய பாலத்தை திறக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஏப்.,6ல் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைந்துள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அன்று முதல் புதிய பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலத்தை திறக்காமல் ரயில்வே நிர்வாகம் அப்படியே வைத்தது.

இதனால் மீன்பிடி தடைக்காலம் முடிந்து சொந்த ஊரான நாகை திரும்பிச் செல்ல முடியாமல் 150 ஆழ்கடல் விசைப்படகுகளின் மீனவர்கள் மற்றும் இழுவை கப்பல்களின் மாலுமிகள் பாம்பன் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் கேரளா, கன்னியாகுமரி, ஆந்திரா துறைமுகங்களில் காத்திருந்தனர்.

இதுகுறித்து ஏப்.,18ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதுகுறித்து விசாரித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், புதிய பாலத்தை திறந்து படகுகள், கப்பல்கள் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி ஏப்., 23, 24ல் புதிய துாக்கு பாலத்தை திறக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Advertisement