பிணையமில்லா கடன் வழங்க வேண்டும்! தொழில் துறையினருக்கு தருவாரா நிர்மலா?

திருப்பூர் : 'உள்ளீட்டு வரி இருப்பு, 300 கோடி ரூபாயை, நிரந்தர 'டிபாசிட்' ஆக கருதி, பிணையமில்லா கடன் வழங்க வேண்டும்' என, திருப்பூர் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

உற்பத்தியாளர்கள், மூலப்பொருட்கள் வாங்கும் போது, ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர். தாங்கள் செலுத்த வேண்டிய வரியை காட்டிலும், கூடுதல் வரி செலுத்தப்பட்டிருந்தால், உள்ளீட்டு வரியாக ஈடு செய்யும் சலுகை உள்ளது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்பத்தி, வர்த்தகம் ஆகிய நிலைகளில், ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர். சரக்கு ஏற்றுமதியானதும், அவர்களுக்கு சேர வேண்டிய உள்ளீட்டு வரி, அவர்களது கணக்கில் சேர்க்கப்படுகிறது.

உள்நாட்டு விற்பனைக்கான உற்பத்தி நிறுவனங்களில், பின்னலாடைகள் உடனுக்குடன் விற்பனை செய்யப்படுவதில்லை; இரண்டு மாதம் வரை இருப்பு வைக்கப்படுகிறது.

விற்பனையின் போது, நுகர்வோர் செலுத்தும் ஜி.எஸ்.டி.,யை பெறும் உற்பத்தியாளர் தரப்பு, கணக்கு தாக்கல் செய்யும் போது, கூடுதலாக செலுத்திய வரியில் ஈடு செய்கிறது.

சரக்கு விற்பனையாகும் வரை, உள்ளீட்டு வரியாக ஈடுசெய்ய, காத்திருக்க வேண்டியுள்ளது.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க துணை தலைவர் பாலசந்தர் கூறுகையில், ''திருப்பூரில், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் 300 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி இருப்பாக சேர்ந்துள்ளது. உற்பத்தியின் போது, 18 சதவீதம் வரை வரி செலுத்துகிறோம்; விற்பனையில், 5 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது; மீதி வரி ஈடுசெய்ய முடியாமல் தேங்கியுள்ளது.

''உபரி இருப்பாக தேங்கியுள்ள உள்ளீட்டு வரி மதிப்பை, நிரந்தர டிபாசிட்டாக கருதி, அதில், 70 சதவீதம் அளவுக்கு, பிணையமில்லா கடனாக வழங்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு கடிதம் அனுப்பிஉள்ளோம்,'' என்றார்.

Advertisement