பேச்சு, பேட்டி, அறிக்கை

சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேட்டி: சமீபத்தில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது, தமிழகத்தில் உள்ள பல்கலைகளை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு, மாநில அரசுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் அளித்திருந்தாலும், கவர்னர் வேந்தராக செயல்படுவதை தடுக்கவில்லை. இந்த சூழ்நிலை உண்மையில் இரண்டு தலைமைகளுக்கு இடையே ஒரு அதிகார மோதலை உருவாக்கிஉள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

வாஸ்தவம் தான்... கவர்னர் - முதல்வர் மோதலுக்கு முற்றுப்புள்ளி விழும் என, பலரும் எதிர்பார்த்தனர்... ஆனா, இப்ப அது அதிகமாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!




தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் பேட்டி: காங்கிரஸ் கட்சியை அழிக்க, தி.மு.க.,வை துவங்கினர். தி.மு.க.,வை அழிக்க, ம.தி.மு.க.,வை துவங்கினர். பொன்முடி கூறியதை எப்படி வாயால் கூற முடியாதோ, அதே போல், கம்யூ., கட்சியைப் பற்றி, ஈ.வெ.ரா., கூறியதையும் வெளியில் சொல்ல முடியாது.
இவர் குறிப்பிட்ட எல்லா கட்சி களும், இன்று தி.மு.க., கூட்டணியில் ஒட்டி உறவாடுகின்றன... இதைத்தான் 'காலம் செய்த கோலம்'னு சொல்லு வாங்களோ?

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு: தி.மு.க., ஆட்சி அமைந்த நேரத்தில், 'உங்களுக்கு என்ன துறை வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; மீதி இருப்பவற்றை மற்றவர்களுக்கு பிரித்து அளிக்கலாம்' என, என்னிடம் முதல்வர் சொன்னார். 'எனக்கு நீர்வளத்துறை தான் வேண்டும். அதுதான், மக்களோடும், விவசாயிகளோடும் தொடர்புடைய துறை' என, முதல்வரிடம் அடித்துக்கூறி, இத்துறையை வாங்கினேன்.

அது சரி... காலம் காலமா, தான் வகித்த பொதுப்பணித் துறையை பெருந்தன்மையோடு தான் எ.வ.வேலுவுக்கு விட்டுக் கொடுத்தேன்னு சொல்றாரோ?

தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி பேட்டி: கவர்னருக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தீர்ப்பை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார். ஆனால், துணை ஜனாதிபதியோ, 'ஜனாதிபதியை கேள்வி கேட்கக் கூடாது' என்கிறார். ஜனநாயகத்தில் யாரிடமும் கேள்வி கேட்கலாம். இது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

'ஜனநாயகத்தில் யாரிடமும் கேள்வி கேட்கலாம்'னு சொல்றாரே... அந்த வகையில்தான், துணை ஜனாதிபதியும் உச்ச நீதிமன்றத்தை நோக்கி சில கேள்விகளை எழுப்பினார்... அது எப்படி மிரட்டலாகும்?

Advertisement