இளைஞர் அணியினரை ஓரங்கட்டும் தி.மு.க., சீனியர்கள்!

மெதுவடையை கடித்த படியே, ''அனுமதியில்லாத விளம்பர பலகைகளை கண்டுக்கவே மாட்டேங்கறா ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னையில், ஆயிரம் விளக்கு, தி.நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அண்ணா சாலை, தேனாம்பேட்டை, ஜி.என்.செட்டி சாலை, நுங்கம்பாக்கம் டாக்டர் எம்.ஜி.ஆர்., சாலை, உத்தமர் காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகள்ல மாநகராட்சி அனுமதி வாங்காம, கட்டடங்கள் மீது பிரமாண்ட விளம்பரப் பலகைகள் வச்சிருக்கா ஓய்...
''அனுமதி வாங்கி வச்சிருக்கற விளம்பரப் பலகைகளை விட, பல மடங்கு உயரத்துல இருக்கற இந்த விளம்பரப் பலகைகள், வாகன ஓட்டிகள் கவனத்தை திசைதிருப்பி, விபத்துகளை உருவாக்கறது...
''இப்படி அனுமதி பெறாம வச்சிருக்கற விளம்பரப் பலகைகளை, சமூக ஆர்வலர்கள் சிலர் போட்டோ, வீடியோ எடுத்து, 'ஆன்லைன்' வழியா மாநகராட்சிக்கு புகாரா அனுப்பியிருக்கா... ஆனா, மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''இதே மாதிரி என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''சென்னை, ஆவடி பகுதியில் முக்கிய அரசியல் கட்சியினர், விதிகளை மீறி ஏராளமான பேனர்கள் வச்சிருக்காங்க... அரசு கட்டடங்கள்லயும் பேனர்களை கட்டுறாங்க பா...
''போன வாரம் ஆவடியில் பலத்த காற்றுடன் மழை பெய்தப்ப, பல இடங்கள்ல பேனர்கள் கிழிஞ்சு தொங்கி, வாகன ஓட்டி களுக்கு இடையூறை ஏற்படுத்துச்சு...
''திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகரில் ஆவடி துணைமின் நிலையம் இருக்கு... இதன் காம்பவுண்ட் சுவர்ல, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, மார்ச் மாசம் ஆளுங்கட்சியினர் ஏராளமான பேனர்களை கட்டுனாங்க பா...
''இந்த பேனர்களை இன்னைக்கு வரைக்கும் எடுக்கல... ஆளுங்கட்சியினர் கட்டிய பேனர்களா இருக்கிறதால, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளும் இதை எடுக்கத் தயங்குறாங்க பா...
''மின்வாரிய அதிகாரி களும் கண்டுக்கல... இதைப் பார்க்கிற மக்கள், 'சுவருக்கு சுண்ணாம்பு அடிக்கிற செலவை மின்வாரிய அதிகாரிகள் மிச்சப்படுத்துறாங்களோ'ன்னு புலம்பிட்டே போறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''இளைஞர் அணியினரை ஓரங்கட்டுதாங்க...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தி.மு.க.,வுல சீனியர்கள் எல்லாம் முதல்வர் ஸ்டாலின் ஆதரவாளர்களாகவும், ஜூனியர்கள் எல்லாம் உதயநிதி ஆதரவாளர்களாகவும் இருக்காவ... இவங்களுக்கு மத்தியில எப்பவும் ஒரு பனிப்போர் ஓடுது வே...
''சென்னை மாநகரில் இருந்த பனிப்போர் தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் பரவுது... உதாரணமா, தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வுல இருக்கிற சீனியர் நிர்வாகிகள் பலரும், மூத்த அமைச்சர்களின் ஆதரவாளர்களா தான் இருக்காவ வே...
''இவங்க, மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை கண்டுக்கிறதே இல்ல... இளைஞர் அணி சார்புல தண்ணீர் பந்தல் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குறது போன்ற நிகழ்ச்சி களுக்கு கட்சியினர் கூட்டம் ரொம்ப சேராம பார்த்துக்கிடுதாவ வே...
''அந்த நிகழ்ச்சிகளுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகி கள் போறதையும் தடுத்துடுதாவ... இதனால, நொந்து போயிருக்கிற இளைஞர் அணி நிர்வாகிகள், உதயநிதிக்கு புகார்களை அனுப்பியிருக்காவ... ஆனா, இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்ல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.
மேலும்
-
கல்வித்துறை ஒப்பந்த வாகனங்களுக்கு வாடகை 'தாராளம்': புதிதாக கொள்முதல் செய்யாத பின்னணி என்ன
-
மோடிக்கு ஆறுதல் சொன்ன வான்ஸ்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பிரதமருக்கு முஸ்லிம்களின் செய்தி: சோனியா மருமகன் சர்ச்சை
-
ரூ.10 லட்சத்துக்கு அதிகமான விலையில் வாங்கும் பொருட்களுக்கு இனி 1 % வரி
-
வெளிநாட்டில் உயர்கல்வி பெறுவதில் தென்மாவட்ட பங்களிப்பு 'பூஜ்யம்
-
ரேஷன் கடைகளை ஆய்வு செய்வதற்கு 'எண்ட் கார்டு' இல்லையா: பணியாளர்கள் வேலைநிறுத்தம்