ஆசிய குத்துச்சண்டை: இந்தியா அபாரம்

அம்மான்: ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை அரையிறுதிக்கு நெல்சன், லக்சய் போகத், பிரின்சி உள்ளிட்ட 5 இந்திய நட்சத்திரங்கள் முன்னேறினர்.

ஜோர்டானில், 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 15 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதி போட்டி நடந்தது. ஆண்களுக்கான 55 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நெல்சன், சீனதைபேயின் வாங் ஷெங்-யாங் மோதினர். இந்திய வீரரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சீனதைபே வீரர் திணறியதால் போட்டியை பாதியில் நிறுத்திய 'ரெப்ரி', நெல்சன் வெற்றி பெற்றாக அறிவித்தார்.

ஆண்களுக்கான 61 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அபிஜீத் 5-0 என கஜகஸ்தானின் முகமது பர்கனோவை தோற்கடித்தார். இந்தியாவின் லக்சய் போகத் (64 கிலோ) 5-0 என ஜோர்டானின் லைத் அஜைலத்தை வென்றார். மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரவி சிஹக் (52 கிலோ), நமன் சைனி (58 கிலோ) தோல்வியடைந்தனர்.
பெண்களுக்கான 52 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரின்சி 5-0 என உக்ரைனின் யேவா குபனோவாவை வீழ்த்தினார். இந்தியாவின் சம்ருத்தி சதிஷ் ஷிண்டே (55 கிலோ), உக்ரைனின் கேசேனியா சவினாவை தோற்கடித்தார். இதுவரை 11 இந்திய நட்சத்திரங்கள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

Advertisement