கலெக்டர் அலுவலக வளாகத்தில் சாலை விழிப்புணர்வு பூங்கா

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 3.39 கோடி ரூபாய் மதிப்பில், சாலை பாதுகாப்பு பூங்கா மற்றும் படிப்பகம் அமைய உள்ளது.

திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, சி.வி.நாயுடு சாலையில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. கலெக்டர் அலுவலக நுழைவாயிலின் இடதுபுறம் இரண்டு செயற்கை குளம் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. வலதுபுறம் ஒரு செயற்கை குளம் மற்றும் அடர்வனம் அமைந்துள்ளது.

இந்த இரண்டு பகுதியிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா மற்றும் படிப்பகம், 3.99 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, பூங்கா மற்றும் படிப்பகம் அமையவுள்ள இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்க உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் பிரதாப் கூறியதாவது:

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2.29 கோடி ரூபாய் மதிப்பில் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இதன் நோக்கம், சாலை பாதுகாப்பு மற்றும் சாலையில் வாகனங்கள் பயன்படுத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறை குறித்து பொதுமக்களும், மாணவர்களும் நேரடி கள ஆய்வு ஏற்படுத்துவது தான்.

மாணவர்களின் அறிவு திறன் மேம்படுத்தும் வகையில், அறிவியல் சார்ந்த உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தேவையான நடைபாதை, ஓய்வு எடுக்க இருக்கை வசதியும் அமைக்கப்படும். குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட உள்ளது.

கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலின் வலதுபுறம் 1.70 கோடி ரூபாய் மதிப்பில் படிப்பகம் அமைக்கப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அமைதியான சூழலில் அவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் பல்வேறு கல்வி சார்ந்த உரையாடல்களை மேம்படுத்துவதற்காக இப்படிக்கம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement