அரசு மருத்துவமனைகளில் தினசரி 24,134 பேருக்கு சிகிச்சை: கலெக்டர் தகவல்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 24,134 பேர் புற நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று செல்கின்றனர் என சுகாதாரத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார்.

கடலுார் மாவட்ட சுகாதாரத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மருத்துவ நலப்பணிகள் (பொறுப்பு) இணை இயக்குநர் குமார், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் திருப்பதி, சுகாதார நலப் பணிகள் துணை இயக்குநர்கள் பொற்கொடி, சித்திரை செல்வி, கருணாகரன் மற்றும் அனைத்து அரசு வட்டார மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை டாக்டர்கள், அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கலைஞர் வரும்முன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், மக்களை தேடி மருத்துவம், மகப்பேறு மருத்துவத்தில் குழந்தைகள் இறப்பு தடுக்கும் நடவடிக்கைகள், சிறு வயது கர்ப்பத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கலெக்டர் கூறுகையில், 'மாவட்டத்தில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 நகர்ப் புற சுகாதார நிலையங்கள், 319 துணை சுகாதார நிலையங்கள், 10 வட்டார மருத்துவமனைகள் உள்ளன. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 457 டாக்டர்கள், 13 ராணுவ மருத்துவ அதிகாரிகள், 26 தேசிய குழந்தைகள் நல திட்டக் குழுவினர் பணிபுரிகின்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 900 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 24,134 பேர் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் 8,381 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் மாதம் ஒன்றுக்கு 1,081 கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மகப்பேறு சிகிச்சையில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement