கிராமங்கள் தன்னிறைவு எப்போது நனவாகும்?

கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பர். விவசாயம் துவங்கி, கால்நடை வளர்ப்பு வரை, கிராமப் பொருளாதாரம் என்பது, நாட்டின் முதுகெலும்பு என காந்தி துவங்கி, பல்வேறு அறிஞர்கள், வல்லுனர்கள் பறைசாற்றியுள்ளனர்.

ஒரு காலத்தில், கிராமங்களில் குடியேற மக்கள் தயக்கம் காட்டிய நிலையும் உண்டு. அதற்கு காரணம், கழிப்பிட வசதி இல்லாதது, குடிநீருக்கு பஞ்சம், சாலை, தெருவிளக்கு வசதிகள் இல்லாதது போன்ற அடிப்படை கட்டமைப்புகள் கூட திருப்திகரமாக இல்லாதது தான். ஆனால், பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்த பின், கிராம ஊராட்சிகள் படிப்படியாக முன்னேற்றம் காண துவங்கின.

நகரங்களுக்குஇணையான வளர்ச்சி



சாலை வசதி, குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரம், கல்வி, நுாலகம், துாய்மை, பூங்கா, பாதாள சாக்கடை திட்டம் என, பெரும்பாலான கிராம ஊராட்சிகள் நகரத்துக்கு இணையான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

தற்போதைய மத்திய அரசு, துாய்மை இந்தியா திட்டம், ஜல்ஜீவன் மிஷன் என, பிரத்யேக திட்டங்களை வகுத்து, மாநில அரசுகளின் நிதி மற்றும் நிர்வாக பங்களிப்புடன் சாலை, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தேவைகளில் மக்கள் திருப்தியடையும் அளவுக்கு கிராம ஊராட்சிகளை வளர்த்தெடுக்க முனைப்பு காட்டி வருகிறது.

ஏப்., 24 பஞ்சாயத்துராஜ் தினம்



'கிராம ஊராட்சிகள் அனைத்தும், அனைத்திலும் தன்னிறைவு பெற வேண்டும்' என்ற நோக்கில் தான், ஆண்டுதோறும், ஏப்., 24ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இன்னும் எவ்வளவு நாட்கள் கிராம ஊராட்சிகள் தன்னிறைவு கனவாகவே நீடிக்கும் என்ற கேள்வி, பொதுமக்களைத் துளைத்துக்கொண்டே இருக்கிறது.

பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, ஆண்டுதோறும், ஒவ்வொரு மையக் கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தாண்டின் கருப்பொருள், 'கிராம அளவிலான நிர்வாகத்தில் பங்கேற்பு, கிராமப்புற பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றை மேம்படுத்துதல்' உள்ளிட்டவற்றை மையமாக கொண்டுள்ளது.

காணாமல் போகின்றன

விளைநிலங்கள்

கிராமங்களில் தான் இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது என்பர். பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் அந்தந்த ஊரில் உள்ள செல்வந்தர்களின் ஆதிக்கத்தில் தான் ஊராட்சிகள் செயல்படுகின்றன; இதனால், வளர்ச்சி என்பது, ஒரு சாரார் உள்ள பகுதிகளுக்கு மட்டும் சென்றடைகிறது.

கிராமப்புறங்கள், நகரமயமாக்கலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற போதிலும், கிராமங்களில் விவசாயம், நீர் நிலைகள், குளம், குட்டைகள் பாதுகாக்கப்பட வேண்டும். முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் கூட, வீட்டு மனைகளாக வகை மாற்றம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது; இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும். அடைபட்டு, தடைபட்டு, மடை மாற்றம் செய்யப்பட்டுள்ள நீர்நிலைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

- பஞ்சலிங்கம், மாவட்ட செயலாளர்,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்.

திடமிழந்த திடக்கழிவு மேலாண்மை

கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் தான் முன்னோடி. கிராம ஊராட்சிகளில், மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட வற்றில் தன்னிறைவு காணும் சூழல் இருப்பினும், குப்பை மேலாண்மை என்பது படுமோசமாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்பது, தோல்வியுற்ற திட்டமாகவே உள்ளது. வீடு, வீடாக குப்பை சேகரிக்க, குப்பை கொட்ட, தரம் பிரிக்க இடமில்லை. துாய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால், குளம், குட்டைகள் தான் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளன. சாலையோரம், வீதிகளில் எங்கும் குப்பை சிதறலை பார்க்க முடிகிறது. டேங்க் ஆபரேட்டர் பணியிடமும் நிரப்பப்பட வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடு, நுாறு சதவீதம் பயனளிப்பாக மாற்றப்பட்டால், பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடுவதன் நோக்கம் முழு பலன் தரும்.

- தேவகி, முன்னாள் ஊராட்சி தலைவர், தொரவலுார்.

Advertisement