துள்ளியோடும் மான்கள் தாகம் தணிக்க ஏற்பாடு

தகிக்கும் கோடையின் தாக்கம், மனிதர்களுக்கு மட்டுமல்ல... இம்மண்ணில் மனிதர்கள் வாழ்வதற்குரிய பல்லுயிர் சூழலை உருவாக்கும் பறவை, விலங்கினங்களுக்கும் தான் உண்டு.

வனம், அது சார்ந்த பகுதிகளில் தங்களுக்கென ஒரு வாழ்விடத்தை உருவாக்கி விலங்கினங்கள் வசித்து வருகின்றன.தங்களுக்கான உணவு, நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது, தங்கள் வசிப்பிடத்தை விட்டு, அவை குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.

அப்போது தான், மனித - விலங்கு மோதல் உள்ளிட்டவை நிகழ்கின்றன. எனவே, கோடையில், வனம் அது சார்ந்த பகுதிக்குள் வாழும் விலங்குகளின் தாகம் தணிக்க, வனத்துறை சார்பில், தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவது வழக்கம்.

அந்த அடிப்படையில், கிட்டத்தட்ட, 1,500 மான்கள் வசிக்கும், அவிநாசி வட்டம் கோதபாளையம், புதுப்பாளையம், சாமந்தன்கோட்டை, வண்ணாற்றங்கரை பகுதிகளில், வனத்துறை சார்பில் மான்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டுள்ளது.

'இப்பகுதிகளில் வசிக்கும் மான்கள், அருகேயுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை துவம்சம் செய்து விடுகின்றன' என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வரும் நிலையில், கோடையில் இத்தகைய குற்றச்சாட்டு வலுப்பெறும்.

இதை தவிர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் பாரஸ்டர் சங்கீதா மேற்பார்வையில் வன ஊழியர்கள், அங்குள்ள தொட்டிகளில் நீர் நிரப்பி, மான்களின் தாகம் தணித்து வருகின்றனர்.

''மான்களுக்கு தேவையான உணவு, நீர் கிடைப்பதால், அவை வெளியில் செல்வது குறைந்திருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையில், மான்களுக்கு தேவையான புல் உள்ளிட்ட தீவனங்களும் இப்பகுதியில் கிடைக்கின்றன,'' என்கிறார் பாரஸ்டர் சங்கீதா.

Advertisement