நடுநிலையான விசாரணைக்கு தயார்; நாடகம் ஆடுகிறது பாகிஸ்தான்!

24

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.


@1brகாஷ்மீரில் 26 பேரை பலி கொண்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தி உள்ளது. பயங்கரவாதத்தை எந்த சூழலிலும் அனுமதிக்க முடியாது என்று உலக நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் கிளை அமைப்பான டி.ஆர்.எப்., பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானில் ராணுவ அகாடமியில் அவர் பேசுகையில் கூறியதாவது;


நம்பகமான விசாரணைகள், ஆதாரங்கள் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் மீது சுமத்தப்பட்டு வருகின்றன. நிரந்தரமான பழியை சுமத்த வேண்டும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு தான் பஹல்காம் சம்பவம். இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.


பொறுப்பான நாடாக, எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு பாகிஸ்தான் திறந்த மனதுடன் தயாராக இருக்கிறது.


இவ்வாறு அவர் பேசினார்.


ஒவ்வொரு முறை இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடக்கும் போதும், இதுபோன்று பாகிஸ்தான் பிரதமர்கள், அதிபர்கள், ராணுவ தளபதிகள் நாடகம் ஆடுவது வழக்கம். அதுபோலவே இப்போதும் பாகிஸ்தான் பிரதமர் கூறியிருக்கிறார்.


இதனிடையே பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது. தாக்குதலை கண்டித்துள்ள பாதுகாப்பு கவுன்சில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வெளியிட்டுள்ளது.

Advertisement