'டவுன்ஷிப்' அமைக்க எதிர்ப்பது ஏன்? தேவகவுடாவுக்கு சிவகுமார் கேள்வி

மைசூரு : “குமாரசாமி முதல்வராக இருந்தபோது, டவுன்ஷிப் அமைக்கப்படவில்லை. நாங்கள் அமைக்கும்போது எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்?” என, முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, துணை முதல்வர் சிவகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராம்நகரின் பிடதியில் டவுன்ஷிப் எனும் ஒருங்கிணைந்த குடியிருப்புப் பகுதியை அமைக்க சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிடதியின் பைரமங்களா, கஞ்சுகரஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 24 கிராமங்களின் 10,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா, 'டவுன்ஷிப் அமைக்க விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்த கூடாது' என, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார்.

பிதாமகன்கள்



இதுபற்றி துணை முதல்வர் சிவகுமார் நேற்று மைசூரில் அளித்த பேட்டி:

குமாரசாமி முதல்வராக இருந்தபோது 7 இடங்களில் 'டவுன்ஷிப்' அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்காக 300 கோடி ரூபாய் செலவிட்டனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

தேவகவுடாவும், குமாரசாமியும் 'டவுன்ஷிப்' பிதாமகன்கள். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. கிரேட்டர் பெங்களூரு ஆணையம் சார்பில், 'டவுன்ஷிப்' அமைக்கப்படும்.

பெங்களூரை விட சிறந்த நகரத்தை 10,000 ஏக்கரில் உருவாக்குவோம். நாங்கள் அமைக்கும்போது தேவகவுடா எதிர்ப்பது ஏன்? இதில் அரசியல் செய்ய வேண்டாம். திட்டத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் பணம் அல்லது நிலம் கொடுக்கப்படும்.

காங்., ஆதரவு



ராம்நகர் மாவட்டத்தின் பெயரை எப்படி மாற்றுவது என்று எனக்கு தெரியும். அதை நான் நிச்சயம் செய்வேன். அது பெங்களூரு தெற்கு மாவட்டம்.

காவிரி தாய் கன்னடர்களின் உயிர். தாய்க்கு ஆரத்தி எடுக்க வேண்டும். இதனால் 'காவிரி ஆரத்தி'யை நாங்கள் செய்கிறோம்.

ஸ்ரீரங்கப்பட்டணாவில் 98 கோடி ரூபாய் செலவில் 'காவிரி ஆரத்தி' நடத்துவது பற்றி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இளம்தலைமுறையினர் விருப்பப்படி மைசூரு தசராவில் சில மாற்றங்கள் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம். கம்பாலா போட்டி நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு நிலத்தை அடையாளம் காணும்படி, மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம்.

பழைய நடைமுறைகளுடன், புதிய சடங்குகளையும் செய்ய உள்ளோம். இதுகுறித்து அதிகாரிகளுடன் விவாதித்துள்ளோம்.

காஷ்மீர் சம்பவத்தில் யாரையும் விமர்சிக்க இது சரியான நேரம் இல்லை. ஒரு கட்சியின் பொறுப்பான பதவியில் இருக்கும் நான், யாருக்கு எதிராகவும் பேச மாட்டேன்.

நாட்டின் ஒருமைப்பாடு, அமைதியை பாதுகாக்க மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு, காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement