காஷ்மீர் தாக்குதலை ஆதரித்து கருத்து பதிவிட்டவர் கைது

மங்களூரு : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில், கடந்த 22ம் தேதி, பயங்கரவாதிகளால் 26 சுற்றுலா பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நிச்சு மங்களூரு என்ற பெயரில் செயல்பட்டு வந்த முகநுால் பக்கத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய கருத்து பதிவிடப்பட்டது.

அந்த பதிவில், 'மஹாராஷ்டிராவில் 2023ம் ஆண்டு, பால்கர் ரயில் நிலையத்தில், முஸ்லிம்களை குறிவைத்து தேசன் சிங் என்பவர் தாக்குதல் நடத்தினார். இதில், மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தேசன் சிங்கிற்கு துாக்கு தண்டனை வழங்கப்பட்டு இருந்தால், தற்போது பஹல்காமில் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது' என குறிப்பிட்டப்பட்டிருந்தது.

இந்த பதிவு, முகநுாலில் வைரலாகிய நிலையில், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தட்சிண கன்னடா, மங்களூரு, உல்லால் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார், கொனாஜே போலீஸ் நிலையத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிச்சு மீது புகார் அளித்தார்.

இப்புகாரில், முகநுாலில் பதிவிடப்பட்ட 'ஸ்கிரீன் ஷாட்டுகள்' ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டன. பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து, நிச்சு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று நிச்சுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement