'மாஜி'க்கள் கார்களில் தேசிய கொடிக்கு தடை

பெங்களூரு : தங்களின் கார்களில் முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தேசியக் கொடி பறக்கவிடவும், தேசியச் சின்னத்தை பயன்படுத்தவும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கர்நாடகாவில் முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் கார்களில் 'பானட்' பகுதியில் தேசியக் கொடி பறக்க விடவும், கண்ணாடியில் தேசியச் சின்னத்தை ஒட்டவும் தடை விதிக்க கோரி, சட்ட சேவைகள் குழு, உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அருண் விசாரித்து வந்தனர். விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் நேற்று கூறிய தீர்ப்பு:

முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பதவியில் இல்லாவிட்டாலும் தங்கள் கார்களில் தேசியக்கொடி, சின்னங்களை பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. இது பொதுமக்களுக்கு தவறான செய்தியை அனுப்புகிறது. இதனால் முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் கார்களில் தேசியக் கொடி, தேசியச் சின்னங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

பொது இடங்கள், வாகனங்களில் தேசியக் கொடி அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியக் கொடி, சின்னம் ஆகியவை நமது தேசம், நாட்டின் பெருமை, கவுரவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. நாட்டின் இறையாண்மையை குறிக்கின்றன. வரலாறு, கலாசாரம், தேசியக் கொள்கையை கற்பிக்கிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊடகங்கள் மூலம் எச்சரிக்கை விடுத்து, முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.க்கள் கார்களில் பொருத்தப்பட்டு இருக்கும் தேசியக் கொடி, சின்னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியக் கொடி, சின்னம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தேசியக் கொடி, சின்னத்தை தவறாக பயன்படுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், டிரைவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் விதிகள் வகுக்கப்பட வேண்டும். போக்குவரத்து போலீசாருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement