நாட்டின் பாதுகாப்பு சார்ந்த செய்தி வெளியிடுவதில் பொறுப்பு தேவை: மீடியாக்களுக்கு மத்திய அரசு அறிவுரை

12


புதுடில்லி: நாட்டின் பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக செய்தி வெளியிடும் போது மீடியாக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

*நாட்டின் நலன் கருதி, அனைத்து மீடியாக்கள், செய்தி ஏஜென்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் அனைத்தும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடும் போது, பொறுப்புடனும் மற்றும் தற்போதுள்ள சட்டம் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


*பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது செயல்பாடு தொடர்பாக, ' Sources-based' தகவல்கள் அடிப்படையாக கொண்டு நேரடி ஒளிபரப்பு செய்வதோ, காட்சிபடுத்துதல் அல்லது செய்தி வெளியிடக்கூடாது. முன்கூட்டியே தகவல்களை வெளியிடுவது என்பது, எதிரிகளுக்கு உதவக்கூடும்.


*கார்கில் போர், மும்பை பயங்கரவாத தாக்குதல், காந்தகாருக்கு விமானம் கடத்தலின் போது, கட்டுப்பாடு இல்லாமல் செய்தியாக்கப்பட்டது, நாட்டு நலன்கள் மீது எதிர்பாராத விதமான பாதக விளைவுகளை ஏற்படுத்தியது.


*நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், மீடியாக்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனி நபர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.


*சட்டப்பூர்வ கடமைகளை தவிர, நமது கூட்டு நடவடிக்கைகள் தொடர்ச்சியான செயல்பாடுகளையோ அல்லது நமது பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பையோ சமரசம் செய்யப்படாமல் இருக்க செய்வது நமது கடமை.


*பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என ஏற்கனவே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதனை மீறி செயல்படுவது நடவடிக்கை எடுக்க வகை செய்யும். எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை, நாட்டின் நலன் கருதி மீடியாக்கள் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகள் முடிந்தவுடன், அரசு நியமிக்கும் அதிகாரி விளக்கம் அளிப்பார்.


*சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கவனமுடனும், பொறுப்புடனும் செய்தி வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement