காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி; யார் அனுமதிக்காக காத்திருக்கிறது போலீஸ்?

சென்னை: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி மீது வழக்கு பதியலாமா என்பது பற்றி சட்ட ஆலோசனை கேட்டு காத்திருக்கின்றனர், கோவை போலீசார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் பெயர்களைக் கேட்டு, ஹிந்துவா என்பதை உறுதி செய்விட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, தி.க., மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவாளரான சுந்தரவல்லி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது. அந்தப் பதிவில் அவர் ,"காஷ்மீரில் சுற்றுலா சென்றவர்களை இஸ்லாமியர்களா என ஆடையை கழற்றி பார்த்துவிட்டு சுட்டுக் கொன்றவர்கள் ராணுவ உடையில் துப்பாக்கியோடு சென்று சுட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பும் ராணுவத்தை வைத்து பா.ஜ., இதை செய்திருக்கிறது" எனக் கூறியிருந்தார்.
இப்படி மத்திய அரசு மீதும், ராணுவம் மீதும் அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்தன. அவர் மீது தமிழகம் முழுவதும் வெவ்வேறு மாவட்டங்களில் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வழக்கு பதியப்படவில்லை. 'வழக்கு பதியலாமா' என்று சட்ட ஆலோசனை கேட்பதற்காக, அரசு வழக்கறிஞருக்கு புகாரை அனுப்பி உள்ளோம்' என்று போலீசார் கூறுகின்றனர்.
மத்திய அரசு மீதும், ராணுவம் மீதும் இப்படி அப்பட்டமான அவதுாறு பரப்பியவர் மீது வழக்கு பதிவதற்கு, சட்ட ஆலோசனை கேட்பதை போன்ற முட்டாள்தனம் எதுவுமில்லை. இதுபோன்று, அசாம் மாநிலத்தில் பேசிய ஒரு எம்.எல்.ஏ., மீது அந்த மாநில அரசு தேச துரோக சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்திருக்கிறது.
ஆனால், தமிழகத்திலோ, சட்ட ஆலோசனைக்காகவும், உயர் அதிகாரிகளின் கண் அசைவுக்காகவும் போலீசார் காத்திருக்கும் அவலம் இருக்கிறது.
இதற்கிடையே, சுந்தரவல்லி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று இணையத்தில் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.










மேலும்
-
மனைவியின் கள்ளக்காதலரை கண்டித்த கணவர் கொலை
-
கிராம சபை கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதில் திணறல்
-
எலும்பு அறுவை சிகிச்சைக்கு புதிதாக 'ஓ - ஏஆர்எம்' சாதனம்
-
மாயமான ஆந்திர கப்பலின் சிக்னல் கிடைத்தது: இன்று பாம்பன் வருகை
-
இரண்டு உயிரை காவு வாங்கிய பள்ளிக்கரணை சாலை சந்திப்பு
-
வெளிநாட்டு வேலை என ரூ.4.7 லட்சம் மோசடி: சிவகங்கை நபர் மீது வழக்கு