இரண்டு உயிரை காவு வாங்கிய பள்ளிக்கரணை சாலை சந்திப்பு

பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை, கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் அன்பழகன், 56; ஜல்லடியன்பேட்டையில் ஒரு துணிக்கடை ஊழியர்.

நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் வாகனத்தில், வேளச்சேரி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோவில் அருகே உள்ள சாலை சந்திப்பில் திரும்பும்போது பின்னால் வந்த டாரஸ் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அன்பழகன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்த மணிவண்ணன், 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

இதே பள்ளிக்கரணை துலுக்கானத்தம்மன சாலை சந்திப்பில், கண்டிகையைச் சேர்ந்த பெருமாள், 74, என்பவர், கடந்த 14ம் தேதி சாலையை கடக்கும்போது, 'ஸ்கார்பியோ' கார் மோதி படுகாயமடைந்தார்.

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த இவர், நேற்று முன்தினம் காலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எதிர் திசையில் வரும்வாகனங்களால் ஆபத்து




பள்ளிக்கரணை சிக்னலில் இருந்து, வேளச்சேரி - தாம்பரம் பிரதான ஒருவழி சாலையில், ஒரு மணி நேரத்தில், 3,000 வாகனங்கள் கடக்கின்றன. காமகோட்டி நகர் சிக்னல் - ஆயில் மில் வரையும், பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோவில் அருகே உள்ள சாலை சந்திப்பும் குறுகலாக உள்ளது. இதனால் இங்கு வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.


இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளிக்கரணை சிக்னலில் இருந்து, வேளச்சேரி -- தாம்பரம் ஒருவழி சாலையில் எதிர் திசையில் சென்று, செல்வம் நகர் பிரதான சாலை வாயிலாக காமகோட்டி நகர் சிக்னலை அடைகின்றனர். அதிலிருந்து வேளச்சேரி, பல்லாவரம், ஓ.எம்.ஆர்., நோக்கி செல்கின்றனர்.


இந்த சாலையோரம் மின் வாரிய பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக சமன்படுத்தாமல் மண்ணை கொட்டி மூடியுள்ளனர். இதனால், எதிர் திசையில் வரும் இருசக்கர வாகனங்கள், மணல் குவியலால் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். முக்கிய சந்திப்பு பகுதியான இங்கு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement