பஹல்காமின் ஹீரோவான குதிரை உரிமையாளர் சங்க தலைவர்

பஹல்காம்: காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில், குதிரைகள் சங்க தலைவராக இருக்கும் ரயீஸ் அஹமது பட் என்பவர், தனது உயிரை பற்றி கவலைப்படாமல், தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் ஆபத்தில் ஓடிய மக்களுக்கு உதவி செய்தார். இதன் மூலம் ஐந்து சுற்றுலா பயணிகளின் உயிரை காப்பாற்ற முடிந்தது. அவருக்கு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அப்போது, அங்கிருந்த சிலர் சுற்றுலா பயணிகளுக்கு உதவி உள்ளனர். அவர்களை பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த குதிரை சவாரி தொழிலாளியாக இருந்த சையது அடில் உசேன் ஷா என்பவர், பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றார். அப்போது அவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் வெளியானது.
தற்போது, குதிரைகள் சங்க தலைவராக இருக்கும் ரயீஸ் அஹமது பட் என்பவர், சுற்றுலா பயணிகளுக்கு உதவியது தெரியவந்துள்ளது. தாக்குதல் குறித்து அறிந்ததும், பைசரன் பகுதிக்கு சிலரை அழைத்துக் கொண்டு வந்த அவர், தனது உயிரை பற்றி கவலைப்படாமல், படுகாயமடைந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அச்சத்தில் இருந்தவர்களுக்கு உதவி உள்ளார். இதன் மூலம் ஐந்து பேரின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. அவரை பஹல்காமின் கதாநாயகன் என அப்பகுதி மக்கள் புகழ்கின்றனர்.
இது தொடர்பாக ரயீஸ் அஹமது பட் கூறியதாவது: நாங்கள் சென்ற போது, பயங்கரவாதிகள் அங்கு இருந்து இருந்தால் நாங்களும் இறந்திருப்போம். எனது அலுவலகத்தில் நான் அமர்ந்து இருந்தபோது தாக்குதல் குறித்து தகவல் வந்தது. உடனே அங்கிருந்து கிளம்பினேன். வழியில் 6 பேரை என்னுடன் அழைத்து சென்றேன். பைசரன் பகுதியை நெருங்கிய போது, சிலர் வெறுங்காலில் சகதிகளுக்கு மத்தியில் உதவி கேட்டபடி அலறியடித்து ஓடினர். அவர்கள் தண்ணீர் வேண்டும் என கேட்டனர். உடனடியாக வனப்பகுதி வழியாக வரும் குடிநீர் பைப்பை உடைத்து அவர்களுக்கு தண்ணீர் வழங்கி ஆறுதல் தெரிவித்தோம். பயப்பட வேண்டாம். பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என றுதல் கூறினோம். பயத்தில் இருக்கும் மக்களை பாதுகாப்பதே எங்களின் முதன்மையான பணியாக இருந்தது.
தொடர்ந்து சென்ற போது, குதிரை ஓட்டிகள் பயத்தில் கீழே இறங்கி சென்றனர். அவர்களில் 10 பேரை தைரியப்படுத்தி அழைத்து சென்றேன். வழியில் சிலர் சகதியில் விழுந்து கிடந்தனர். அவர்களுக்கு உதவி செய்து குதிரைகளில் அனுப்பி வைத்தோம்.
சம்பவ இடத்தை சென்று பார்த்ததும், இறந்த நிலையில் உடல் கிடந்தது. இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனக்கு 35 வயதாகிறது. இந்நாள் வரை பஹல்காமில் இதுபோன்ற சம்பவத்தை பார்த்தது கிடையாது. உள்ளே சென்ற போது, பல இடங்களில் உடல்கள் கிடந்தன. அங்கு 3 அல்லது 4 பெண்கள் இருந்தனர்.அவர்கள் தங்களது கணவரை காப்பாற்றும்படி கதறி அழுதனர். அவர்களுக்கு உதவியதுடன், மனதை தேற்றியபடி உள்ளே சென்றோம். நாங்கள் சென்ற 10 நிமிடங்களுக்கு பிறகு தான் போலீசார் அங்கு வந்தனர். இந்த பகுதிக்கு வாகனங்களில் வருவதற்கு வழி கிடையாது. நடந்து தான் செல்ல முடியும். நாங்கள் உள்ளூர்வாசிகள் என்பதால், வனப்பகுதி வழியாக குறுக்கு பாதையில் விரைந்து சென்றோம். மற்றவர்களுக்கு அந்த பாதை தெரியாது. இதனால், போலீசார் தாமதமாக வந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


