பஞ்சாப் ரன் மழை வீண்: ஆட்டம் பாதியில் ரத்தானதால்

கோல்கட்டா: கோல்கட்டாவுக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. பஞ்சாப் அணியின் ரன் குவிப்பு வீணானது.

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் 'லெவன்' அணியில் ஸ்டாய்னிஸ், சேவியர் பார்ட்லெட் நீக்கப்பட்டு மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா உமர்ஜாய் இடம் பெற்றனர். கோல்கட்டா 'லெவன்' அணியில் மொயீன் அலி, ராமன்தீப் சிங்கிற்கு பதிலாக ராவ்மன் பாவெல், சேட்டன் சகாரியா தேர்வாகினர். 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

பிரியான்ஷ் அபாரம்: பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வைபவ் அரோரா வீசிய அடுத்தடுத்த ஓவரில் தலா 2 பவுண்டரி விரட்டிய பிரியான்ஷ், சேட்டன் சகாரியா வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். ஹர்ஷித் ராணா பந்தில் பிரப்சிம்ரன் சிங் 2 சிக்சர் பறக்கவிட, பஞ்சாப் அணி 4.3 ஓவரில் 50 ரன்னை எட்டியது.

வருண் சக்ரவர்த்தி பந்தை சிக்சருக்கு அனுப்பிய பிரியான்ஷ், ஹர்ஷித் ராணா வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய பிரியான்ஷ், சுனில் நரைன் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். இந்த ஓவரில் பிரப்சிம்ரன் சிங், தன்பங்கிற்கு ஒரு சிக்சர் அடிக்க 22 ரன் கிடைத்தது. இவர்களை பிரிக்க முடியாமல் கோல்கட்டா பவுலர்கள் திணறினர். முதல் விக்கெட்டுக்கு 120 ரன் சேர்த்த போது ரசல் 'வேகத்தில்' பிரியான்ஷ் (69 ரன், 4 சிக்சர், 8 பவுண்டரி) வெளியேறினார்.

பிரப்சிம்ரன் அரைசதம்: சேட்டன் சகாரியா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பிரப்சிம்ரன் சிங், 38 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், வருண் வீசிய 14வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி அடித்தார். வைபவ் அரோரா பந்தில் பிரப்சிம்ரன் சிங் (83 ரன், 6 சிக்சர், 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார். வருண் 'சுழலில்' மேக்ஸ்வெல் (7) போல்டானார். ரசல் பந்தில் ஒரு சிக்சர் அடித்த கேப்டன் ஷ்ரேயஸ், வைபவ் அரோரா பந்தில் ஒரு பவுண்டரி விரட்டினார். மார்கோ யான்சென் (3) ஏமாற்றினார். ரசல் பந்தை ஜோஷ் இங்லிஸ் பவுண்டரிக்கு அனுப்ப, ஸ்கோர் 200 ரன்னை கடந்தது.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன் எடுத்தது. ஷ்ரேயஸ் (25), இங்லிஸ் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.


மழை குறுக்கீடு: கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன், குர்பாஸ் ஜோடி துவக்கம் தந்தது. மார்கோ யான்சென் வீசிய முதல் ஓவரில் நரைன் ஒரு பவுண்டரி அடித்தார். கோல்கட்டா அணிஒரு ஓவரில்,விக்கெட் இழப்பின்றி 7ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. சுனில் நரைன் (4), குர்பாஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.மழை நீடித்ததால், போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இந்த சீசனில் மழையால் ரத்தான முதல் போட்டியானது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.




120 ரன்


அபாரமாக ஆடிய பிரியான்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன்சிங் ஜோடி (120 ரன்), பிரிமியர் லீக் அரங்கில் கோல்கட்டாவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் குவித்த பஞ்சாப் ஜோடி வரிசையில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் விரிதிமன் சகா - மனன் வோரா (129 ரன், 3வது விக்கெட், 2014) ஜோடி உள்ளது.

Advertisement