காஷ்மீரில் தொடரும் அதிரடி பயங்கரவாதிகள் வீடுகள் இடிப்பு
ஸ்ரீநகர், ஏப். 27-
ஜம்மு - காஷ்மீரில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து தரைமட்டமாக்கினர்.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலை நடத்த உதவியதாக சந்தேகிக்கப்படும், உள்ளூரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஆதில் உசேன் தோகர், ஆசிப் ஷேக்கின் வீடுகள் நேற்று முன்தினம் வெடிகுண்டுகள் வெடித்ததில் தரைமட்டமாகின.
இந்நிலையில் நேற்று, இந்த தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி., வாகனம் வாயிலாக இடித்து தள்ளினர்.
அதன்படி, புல்வாமா மாவட்டத்தின் முரான் பகுதியில் உள்ள பயங்கரவாதி அஹ்சன் உல் ஹக் ஷேக்கின் வீடு இடிக்கப்பட்டது. இவர், 2018ல் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்றும், சமீபத்தில் காஷ்மீருக்குள் ஊடுருவினார் என்றும் கூறப்படுகிறது.
சோபியான் மாவட்டத்தின் சோதிபோராவில், லஷ்கர் -- இ - -தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஷாஹித் அகமது குட்டாய் வீடு இடிக்கப்பட்டது.
இதே போல், குல்காம் மாவட்டத்தின் மதல்ஹாமா பகுதியில், 2023 முதல் தீவிரமாக செயல்பட்டு வரும் பயங்கரவாதி ஜாகிர் அகமது கனியின் வீடும் இடிக்கப்பட்டது. இதுவரை, ஐந்து பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள செடோரி நாலா வனப்பகுதியில், பாதுகாப்பு படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்து அழித்தனர். மேலும், அங்கிருந்து ஏ.கே., 47 துப்பாக்கிகள், கை துப்பாக்கிகள், வெடி மருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
துணை முதல்வர் உதயநிதி பெயரை சொல்லி கோவையில் தி.மு.க.,வினர் வசூல் வேட்டை
-
அண்டை நாடு... அண்ட முடியாத எதிரி நாடு...!
-
ஆன்லைனில் ஜெராக்ஸ் மிஷின் வாங்கி கள்ள நோட்டு தயாரித்தவர் கைது
-
வீராணம் ஏரியில் குறையும் நீர் மட்டம்
-
தொழிலாளியை தாக்கி மொபைல் பறித்த மூன்று பேர் கைது