செய்யூர் வருவாய் ஆய்வாளர் ஆபீசை விரைந்து செயல்படுத்த எதிர்பார்ப்பு

செய்யூர்:செய்யூரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும் என, சுற்றுப்பகுதி கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

செய்யூர் வருவாய் குறுவட்டம் அம்மனுார், புத்துார், பெரும்பாக்கம், கடுகுப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கி செயல்படுகிறது.

இலவச வீட்டுமனை பட்டா பெற, முதியோர் உதவித்தொகை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற தினமும், செய்யூர் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

பல ஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு தனி கட்டடம் கட்டப்படாமல் இருந்ததால், செய்யூர் பள்ளி எதிரே உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்படுகிறது.

இங்கு போதிய இடவசதி இல்லாமல் அதிகாரிகள் சிரமப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம், 28 லட்சம் ரூபாயில் புதிதாக, வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டு, தற்போது வரை செயல்படாமல் பூட்டியே உள்ளது.

எனவே, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பூட்டப்பட்டுள்ள செய்யூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை, விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுப்பகுதி கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement