பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு; மனோ தங்கராஜுக்கு மீண்டும் பதவி

84

சென்னை: தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகித்து வந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


@1brஅரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி முக்கியமா, ஜாமின் முக்கியமா என்று கடந்த விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பினார்.



இது பற்றி முடிவு செய்து நாளை 28ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவரிடம் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பெற்றுள்ளார்.

மற்றொரு அமைச்சரான பொன்முடி, பெண்கள் பற்றியும், சைவம், வைணவம் பற்றியும் அருவருப்பான முறையில் பேசி பொதுமக்களின் கடுமையான அதிருப்திக்கு ஆளானார். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகள், திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அவர் மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, கடுமையான கண்டனம் தெரிவித்தார். பொன்முடி மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் தான் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இருவரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக் கொண்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.


அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு





போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு


வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு


பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்து வந்த வனம் மற்றும் காதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மனோ தங்கராஜூக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு கவர்னர் மாளிகையில் அவர் பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement