காஷ்மீர் தாக்குதல்; பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்ட 14 பேர் கைது

கவுகாத்தி: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக அசாம், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதில், கடற்படை மற்றும் உளவுத்தறை அதிகாரிகள் அடக்கம்.
காஷ்மீரில் நடந்த தாக்குதல் மற்றும் 2019 ல் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் சதி உள்ளதாக கருத்து தெரிவித்த அசாமின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் கடந்த 24ம் தேதி, கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
அசாமில் கைது
இதனைத் தொடர்ந்து அசாமில்
முகமது ஜூபையர் ஹூசைன்(பத்திரிகையாளர்)
முகமது அக்பர் பஹாவுதீன்( கணிப்பொறி பொறியாளர்)
ஜாவேத் மஜூம்தார் (வழக்கறிஞர்)
முகமது மஹாஹர் மியா
முகமது சாஹில் அலி
முகமது முஸ்தா அஹமது ஆகியோர் சமூக வலைதளத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் நேற்று
முகமது ஜாரிப் அலி
சுமோன் மஜூம்தார்
மஷூத் அசார் ஆகியோர் சமூக வலைதளத்தில் தேசவிரோத கருத்து பதிவிட்டதற்காக அவர்களை அசாம் போலீசார் கைது செய்தனர்.
தேச விரோத சட்டம்
இது தொடர்பாக அசாம் முதல்வர் கூறும்போது, தேவைப்பட்டால், இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்பாயும். சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம். தேச விரோத கருத்துகளை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாரதத்திற்கும், பாகிஸ்தானுக்கும் ஒற்றுமை கிடையாது. இரண்டு நாடுகளும் எதிரிநாடுகள். நாம் அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றார்.
திரிபுரா
அதேபோல், திரிபுரா மாநிலத்தில் சமூக வலைதளத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேச விரோத கருத்துகளை பதிவிட்டதற்காக
ஜவஹர் தேப்நாத்(ஓய்வு பெற்ற ஆசிரியர்)
குல்தீப் மண்டல்
சாஜல் சக்கரவர்த்தி (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேகாலயா
இந்த மாநிலத்தில் செய்தி சேனலின் சமூக வலைதள பக்கத்தில் தேச விரோத கருத்துகளை பதிவிட்டதற்காக சைமன் ஷைலா(30) என்பவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார்.









