ரூ.2.50 கோடியில் குடிநீர் குழாய் பதிப்பு பணி துவங்கியதால் மதுரவாயலில் நிம்மதி

மதுரவாயல்:வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் 146, 147 ஆகிய வார்டுகளில், 2012 - 2016ல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, குடிநீர் வாரியம் சார்பில் பிளாஸ்டிக் குழாய் பதிக்கப்பட்டது. பணி முடிந்து, 2018 முதல், வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

அதே வார்டுகளில் 2011ல், 50 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி துவங்கப்பட்டு, 2018ல் முடிக்கப்பட்டது.

இப்பணியாலும், பிற சேவை துறைகள் செய்த பணிகளாலும், 146 மற்றும் 147வது வார்டில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. அதில் கழிவுநீர் கலந்ததால், பகுதிவாசிகள் மிகவும் அவதிப்பட்டனர். கழிவுநீர் எந்த இடத்தில் கலக்கிறது என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, மதுரவாயல் பகுதியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய் அனைத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து இரு வார்டுகளிலும் தலா 4 கி.மீ., துாரத்திற்கு டி.ஐ., குழாய் எனும் இரும்பு குழாய் அமைக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்தது. மாற்று ஏற்பாடாக, தற்போதுவரை லாரி வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக, 147வது வார்டில், 3.5 கி.மீ., துாரத்திற்கு, ஸ்ரீ தேவி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 2.4 கோடி ரூபாய் மதிப்பில் இரும்பு குழாய் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. இப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.

மதுரவாயல் 146வது வார்டில், பாரதிதாசன் நகர், ராஜிவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 4 கி.மீ., துாரத்திற்கு 2.5 கோடி ரூபாய் செலவில் இரும்பு குழாய் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இப்பணிகள் மூன்று மாதங்களில் முடிக்கப்பட்டு, குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement