சேவையே உயிர் மூச்சாக..

அது ஒரு விழா
விழா தொடர்பான எளிய விருந்தில் அமர்ந்து அவர் சாப்பிட ஆரம்பிக்கிறார்
அப்போது அவரது உதவியாளர் பதட்டத்துடன் ஒடி வருகிறார்
அம்மா..அந்த பெண்ணுக்கு கடுமையான பிரசவ வலி. துடித்துக் கொண்டு இருக்கிறார்.. என்கிறது உதவியாளர் குரல்..
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு உடனே எழுந்து ஒட்டமும் நடையுமாக பிரசவ அறை நோக்கி செல்கிறார்
அவர் பிரசவ அறைக்குள் நுழைந்ததுமே வெளியே இருந்த உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் இனி எல்லாம் சுபமாகவே நடக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
அதே போல அடுத்த சில நிமிடங்களில் ஆரோக்கியமான பெண் குழந்தையுடன் வெளியே வந்து தாயும் சேயும் நலம் என்று புன்னகையுடன் சொல்கிறார்.
அவரது புன்னகை அனைவருக்குமான சந்தோஷமாக அந்த இடத்தில் பரவுகிறது
அவருக்கு அது எத்தனையாவது பிரசவம் என்று கணக்கு வைத்துக் கொள்ளவில்லை ஆனால் பல ஆயிரத்தை தாண்டியிருக்கும் என்கின்றனர் சுற்றியிருப்பவர்கள்
யார் அவர்?
டாக்டர் கவுசல்யா தேவி
1930 ஆம் வருடம் சாத்துார் அருகே உள்ள அருணாசலபுரம் கிராமத்தில் பிறந்தவர்,அப்பா ரகுபதி கால்நடை மருத்துவர்.சிறுவயது முதலே சேவை செய்யவேண்டும் என்று தனது மகள் கவுசல்யாவை சொல்லி சொல்லி வளர்த்தவர்.அதன்படியே படித்து டாக்டர் கவுசல்யா தேவியானார்.
1960 லிருந்து 69 வரை சங்கரன்கோவில்,கோபிசெட்டி பாளையம்,நாகப்பட்டினம் போன்ற பகுகளில் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் 1959-ல் தேர்ச்சி. 1960லிருந்து 69 வரை சங்கரன்கோவில், கோபிசெட்டிப் பாளையம், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்.
நாகப்பட்டினத்தின் பணியாற்றும் போதுதான் கிழ்வெண்மனி சம்பவம் நடந்தது,உயிருக்கு ஆபத்தான முறையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பல உயிர்களை காப்பாற்றினார் இதற்காக தொடர்ந்து 52 மணி நேரம் மருத்துவமனையிலேயே இருந்து பணிபுரிந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள காந்தி கிராமத்தில் இயங்கிவரும் கஸ்தாரிபாய் மருத்துவ மனைக்கு சேவை மனப்பான்மையுள்ள மருத்துவர் தேவை என்பதை அறிந்து நிறுவனர் செளந்திரம் அம்மாளைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையை மேலும் புனிதப்படுத்தியது.
இனி தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவே செலவிடுவது என்று முடிவு செய்தார்.தனது இந்த சேவைப்பயணத்தில் திருமணம் எங்கே தடையாக இருந்துவிடுமோ எனக்கருதி திருமணம் செய்து கொள்வதை தவிர்ததுவிட்டார்.கேட்டால் உயிர் காக்கும் மருத்துவத்தை விட உயர்ந்தது வேறென்ன? நான் அதையே மணம் புரிந்து கொண்டேன் என்பார் மானசிகமாக.
1969 முதல் கஸ்துாரிபாய் மருத்துவ மனையில் சேவை செய்துவந்தார்,இவருக்கு அறுபது வயதானதும் தனது சேவையை எப்போதும் போல தொடர்வதாகவும் ஆனால் இனி சம்பளம் என்று எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
பிரசவம் பார்ப்பதில் மிகவும் கெட்டிக்காரர் என்பதால் இந்த சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டுமின்றி பல பகுதகளில் இருந்தும் இவரிடம் பிரசவம் பார்த்துக் கொள்ளவருவர்.
இந்தப் பகுதியில் விபத்து மற்றும் நீரிழிவு காரணமாக கால்களை இழந்த பெண்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, முதல் முதல் செயற்கைக் கால்களை கண்டுபிடித்த டாக்டர் சேத்தியின் ராஜஸ்தான் மருத்துவமனைக்கு சென்று, அவரிடம் செயற்கை கால்கள் பொருத்தும் நுட்பத்தை கற்றுக் கொண்டு, அதை காந்தி கிராம மருத்துவமனையில் அமுலாக்கியவர் அந்த வகையில் 4,233 பேர் பயன்பெறக் காரணமாக இருந்துள்ளார்.
நாகப்பட்டினம் தீவிபத்தில் பல தாய்மார்கள் தங்கள் ஒற்றைக்குழந்தையை இழந்து தவித்தபோது அவர்களுக்கு கர்ப்பப்பை குழாய் இணைப்பு சிகிச்சை மூலம் மீண்டும் கருவுறச் செய்து குழந்தை பாக்கியம் பெறக்காரணமாக இருந்தார்.
இப்படிப் பல சாதனைகள் செய்த இவருக்கு பத்மஸ்ரீ உள்ளீட்ட பல பட்டங்கள் தேடி வந்தபோதும் தனிப்பட்ட முறையில் நான் பாராட்டப்படுவதை விரும்பவில்லை எனது கஸ்துாரிபாய் மருத்துவமனைக்கு விருது கொடுப்பதையே மதிக்கிறேன், ஏற்கிறேன் என்றவர்.
காந்திகிராம கஸ்துாரிபாய் மருத்துவமனையின் ஆலோசகராக, 'எங்கள் அம்மா' என்றும், தமிழகத்தின் தெரசா என்றும் மக்களால் போற்றப்பட்ட, சேவை செய்வதையே இவர் உயிர்மூச்சாக் கொண்டு 95 வயது வரை வாழ்ந்த டாக்டர் கவுசல்யா தேவிதயின் மூச்சு கடந்த 24 ஆம் தேதி அடங்கிவிட்டது.
ஏழை எளியவர்களுக்கான தொண்டே தெய்வ வழிபாடக் கொண்டு ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து மறைந்திட்ட அந்த அன்பு உள்ளத்தின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
-எல்.முருகராஜ்

மேலும்
-
பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு
-
பஹல்காம் சம்பவத்தை முன்வைத்து மாநில அந்தஸ்து கோர மாட்டேன்; உமர் அப்துல்லா திட்டவட்டம்
-
பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு