சூடு பிடிக்கும் இரட்டை இலை விவகாரம்: மீண்டும் விசாரணையை தொடங்கிய தேர்தல் ஆணையம்

புதுடில்லி:இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் தமது விசாரணையை தொடங்கி உள்ளது.



அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம், அவரது மகன் ஓ.பி. ரவிந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.


இந்த மனுக்கள் மீது கடந்தாண்டு டிசம்பரில் அனைத்து தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. பின்னர் இ.பி.எஸ்., தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தேர்தல் ஆணையம் எதிர்தரப்பு மனுக்கள் மீது விசாரணை நடத்த தடை விதித்து இருந்தது.


அந்த தடை நீக்கப்பட்டு இருந்த நிலையில், மனுதாரர்கள் அனைவரும் இன்று(ஏப்.28) ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, தேர்தல் ஆணையம் தமது விசாரணையை தொடங்கி இருக்கிறது.


விசாரணையின் போது இ.பி.எஸ்., தரப்பில் மாஜி அமைச்சரும், அ.தி.மு.க., எம்.பி.,யுமான சி.வி. சண்முகம், ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வக்கீல் ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்துக்கு சட்டசபை தேர்தல் நெருங்கு நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விவகாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

Advertisement