கால்பந்து: அரையிறுதியில் ஜாம்ஷெட்பூர் * காலிறுதியில் 'திரில்' வெற்றி

புவனேஸ்வர்: சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு ஜாம்ஷெட்பூர் அணி முன்னேறியது. காலிறுதியில் வடகிழக்கு யுனைடெட் அணியை 'சடன் டெத்தில்' சாய்த்தது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., மற்றும் ஐ-லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதன் ஐந்தாவது சீசனில் 15 அணிகள் பங்கேற்கின்றன. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடந்த காலிறுதியில் ஜாம்ஷெட்பூர், வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்காத நிலையில் போட்டி 0-0 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி 'பெனால்டி ஷூட் அவுட்டுக்கு' சென்றது.
இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. இதில் இரு அணியும் தலா 3 கோல் அடிக்க, ஸ்கோர் 3-3 என மீண்டும் சமன் ஆனது. அடுத்து 'சடன் டெத்' நடந்தது. இரு அணிக்கும் தலா ஒரு வாய்ப்பு மாறி மாறி வழங்கப்படும். முதலில் இரு அணியும் தலா ஒரு கோல் அடித்தன.
அடுத்த வாய்ப்பில் ஜாம்ஷெட்பூர் வீரர் சர்கோவிச் கோல் அடித்தார். வடகிழக்கு அணியின் ஆஷீர், அடித்த பந்து கோல் போஸ்ட் மேல்பகுதியில் பட்டுத் திரும்பியது. இதையடுத்து ஜாம்ஷெட்பூர் அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் நாளை மும்பையை சந்திக்க உள்ளது.

Advertisement