ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு

3


மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை, தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1997ல் வெளிநாட்டில் இருந்து அனுமதி இன்றி நன்கொடை பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா மீது புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹைதர் அலி என்பவருக்கும், ஓராண்டு சிறை தண்டனையும், சையத் நிசார் அஹமத், ஜி.எம்.ஷேக் மற்றும் முகமத் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஜவாஹிருல்லா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், எதிர் மனுதாரரான சி.பி.ஐ.,க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.




- டில்லி சிறப்பு நிருபர் -

Advertisement