'கிங்' கோலியின் வெற்றி ரகசியம்: தொடரும் பெங்களூரு ஆதிக்கம்

புதுடில்லி: பிரிமியர் தொடரில் கோலி கொடி பறக்கிறது. இவரது விளாசல் தொடர்வதால், 'ஈ சாலா கப் நம்தே' (இந்த ஆண்டு கோப்பை நமதே) என்ற பெங்களூரு ரசிகர்களின் நீண்ட கால கனவு நனவாக வாய்ப்பு உள்ளது.

பிரிமியர் தொடரில் கடந்த 17 ஆண்டுகளாக போராடியும் பெங்களூரு அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை. தற்போது 18வது தொடர் நடக்கிறது. பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் கோலியின் ஜெர்சி நம்பரும் '18'. இந்த ராசி கைகொடுத்தால், இம்முறை கோப்பை கைகூடலாம். இதற்கு ஏற்ப கோலியும் 36, ரன் மழை பொழிகிறார்.

443 ரன் விளாசல்: டில்லியில் நடந்த லீக் போட்டியில் டில்லி அணியை (162/8), பெங்களூரு (165/4) வென்றது. இதில் பெங்களூரு அணி 4 ஓவரில் 26/3 என தவித்தது. அப்போது கோலி (51), குர்ணால் பாண்ட்யா (73*) அருமையான 'பார்ட்னர்ஷிப்' அமைத்து அணியை மீட்டனர். நான்காவது விக்கெட்டுக்கு 84 பந்தில் 119 ரன் சேர்த்து, வெற்றியை உறுதி செய்தனர். இத்தொடரில் 6வது அரைசதம் அடித்த கோலி, இதுவரை 10 போட்டியில் 443 ரன் (சராசரி 63.28, ஸ்டிரைக் ரேட் 138.87) குவித்து, அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சிறந்த 'சேஸ் மாஸ்டர்': பெங்களூரு அணி இம்முறை 'சேஸ்' செய்த நான்கு போட்டிகளிலும் வென்றது. இதில் 4 அரைசதம் விளாசிய கோலி, 245 ரன் (சராரி 245) குவித்து, 'சேஸ் மாஸ்டர்' என்பதை நிரூபித்தார். வெற்றிகரமாக 'சேஸ்' செய்யும் தனது பேட்டிங் 'பார்முலா' குறித்து கோலி கூறியது: 'சேஸ்' செய்யும் போட்டிகளில், முதலில் ஸ்கோர் போர்டில் உள்ள இலக்கை கவனிப்பேன். ஆடுகள சூழ்நிலையை ஆய்வு செய்வேன். எதிரணியில் யார் எல்லாம் பந்துவீசப் போகிறார்கள் என தெரிந்து கொள்வேன். இவர்களில் யாருடைய பந்துவீச்சை சமாளிப்பது கடினம் என்பதை கணித்து கொள்வேன். 'டக்அவுட்' பகுதியில் இருக்கும் சக அணியினரிடம் அடிக்கடி பேசுவேன். சரியான திசையில் செல்கிறோமா, எனது பணி என்ன, நான் எந்த மாதிரி விளையாட வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்வேன். ஒன்று, இரண்டு ரன் எடுப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன். மறுமுனையில் இருக்கும் வீரருக்கு 'ஸ்டிரைக்' மாற்றுவதில் கவனமாக இருப்பேன். அவ்வப்போது பவுண்டரி கிடைத்துவிடும் என்பதால், போட்டியின் எந்த ஒரு கட்டத்திலும் ரன் இல்லாத தேக்க நிலை ஏற்படாது.


'பார்ட்னர்ஷிப்' முக்கியம்: சமீப காலமாக, 'டி-20' போட்டியில் 'பார்ட்னர்ஷிப்' அமைத்து, கடைசி வரை நிலைத்து நின்று விளையாடுவதன் முக்கியத்துவத்தை வீரர்கள் மறந்துவிட்டனர். தற்போதைய தொடர், சிறந்த கூட்டணி அமைத்து விளையாடுவது அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது. முதல் பந்தில் இருந்து விளாச முடியாது. மந்தமான ஆடுகளத்தில் 'ஸ்டிரைக்' மாற்றுவதும் கடினம். அப்போது சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டால், 'சேஸ்' செய்வது எளிது.


வெற்றிநடை தொடரும்: டில்லிக்கு எதிராக 3/26 ரன் என தவித்த நிலையில், குர்ணால் பாண்ட்யா சிறப்பாக 'கம்பெனி' கொடுத்தார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. பந்துவீச்சில் ஹேசல்வுட், புவனேஷ்வர், குர்ணால் அசத்தினர். கடைசி கட்டத்தில் டிம் டேவிட், 5 பந்தில் 19 ரன் விளாச, தரமான வெற்றியை பதிவு செய்தோம். 10 போட்டியில் 7ல் வென்றுள்ளோம். எங்களது வெற்றிநடை தொடரும் என நம்புகிறேன்.

இவ்வாறு கோலி கூறினார்.


ஆற்றல் நாயகன்


பிரிமியர் அரங்கில் 9 ஆண்டுகளில் முதல் முறையாக அரைசதம் அடித்து, ஆட்டநாயகன் விருது வென்ற குர்ணால் பாண்ட்யா கூறுகையில்,''கோலியின் ஆற்றல், அருகில் இருப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. மறுமுனையில் அவர் இருந்ததால், ரன் சேர்ப்பது எளிதானது. முதல் 20 பந்துகளில் தடுமாறினேன். அப்போது ஊக்கம் அளித்தார். எனது அரைசதத்தில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. பேட்டிங் தான் எனது பலம். பந்துவீச்சில் ரன்னை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கிறேன்,''என்றார்.

Advertisement