அதிகாரிகள் சுருட்டி வைத்த விதிமீறல் பேனர்கள் அகற்றம்

சென்னை,நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, சென்னையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த விதிமீறல் பேனர்கள், நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.

சென்னையில் விதிமீறல் பேனர்கள் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பது குறித்து, சமீபத்தில் நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, அனுமதி பெற்ற, பெறாத பேனர்கள் குறித்த பட்டியலை மாநகராட்சி தயாரித்தது.

தொடர்ந்து, விதிமீறல் பேனர்களை அதிரடியாக அகற்ற, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டார்.

ஆங்காங்கே மாநகராட்சி பேனர்கள் அகற்றப்பட்டன. தேனாம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில், விளம்பர நிறுவனங்களிடம் வசூல் நடத்தும் நோக்கில், விதிமீறல் பேனர்களை முழுமையாக அகற்றாமல், அதிகாரிகள் ஆங்காங்கே சுருட்டி வைத்தனர்.

இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று, புகைப்படத்துடன் விரிவான செய்தி வெளியானது.

அதை தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் உத்தரவுப்படி, சுருட்டி வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தும், நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.

முதல்வர் தனிப்பிரிவில் புகார்

சென்னையில் வழிபாட்டு தலங்கள் மீது விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என அரசாணை உள்ளது. இந்த உத்தரவை மீறி, தேனாம்பேட்டை மண்டலம், 118வது வார்டு அண்ணா மேம்பாலம் அருகே உள்ள மசூதி மீது, விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.விதி மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை, விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement