இரவில் தொடரும் மின் தடையால் உறங்க முடியாமல் தவிக்கும் மக்கள்

சென்னை: சென்னை உட்பட பல மாவட்டங்களில், இரவில் தொடரும் மின் தடையால், மக்கள் துாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் வெயில் சுட்டெரிப்பதால், வீடு, அலுவலகங்களில், 'ஏசி' பயன்பாடு அதிகமாக உள்ளது. தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட்டாக உள்ள மின் நுகர்வு, கடந்த வாரம், 19,000 - 20,000 மெகாவாட் வரை அதிகரித்தது.
இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின் தடை ஏற்படுகிறது.
லோ வோல்டேஜ்
குறிப்பாக, இரவில் தொடரும் மின் தடையால், மக்கள் துாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சென்னை புறநகரில் பல இடங்களில், 'லோ வோல்டேஜ்' எனப்படும், குறைந்த மின்னழுத்த பிரச்னையாலும், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'இரவில் மின் தடை தொடர்பாக புகார் அளித்தாலும், மின்சாரம் வர தாமதமாகிறது. அப்படியே வந்தாலும், மின்னழுத்தம் ஏற்படுவதால், மின் சாதனங்களை இயக்க முடிவதில்லை; அதனால், துாங்க முடியவில்லை' என்றனர்.
மின்வாரிய பணியாளர்கள் கூறுகையில், 'இரவில் மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டால், விரைந்து சரிசெய்ய தேவையான பணியாளர்களை நியமிக்குமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களை, உயரதிகாரிகள் அறிவுறுத்தினர். அதை செய்யாததால், மின் சாதன பழுதை சரிசெய்வதில் தாமதம் ஏற்படுகிறது' என்றனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
துணை மின் நிலையம், மின் வினியோக சாதனங்கள் வெப்பத்துடன் இருப்பதால், மாதந்தோறும் பராமரிப்பு பணி செய்யப்படும். பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வால், பிப்., முதல் பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
சாதனங்கள் பழுது
வெயிலின் தாக்கத்தால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, இம்மாதம், 30ம் தேதி வரை அந்த பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சில இடங்களில் மின் சாதனங்கள் பழுதாகி, மின் தடை ஏற்படுகிறது. எனினும் புகார் பெற்ற, 30 நிமிடங்களுக்குள் சரி செய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி மர்ம விலங்கு கடித்து மாடு காயம்
-
'பட்டாசு விபத்து பாதுகாப்பு; உயிரில்லாத அரசாணை'
-
அரசு கொள்முதல் நிலையத்தில் எடை போட தாமதம் சாலையோரம் நெல்லை கொட்டும் அவலம்
-
அந்தியூர் ஸ்டூடியோவில் திருடிய கேரள கேமரா களவாணி கைது
-
பாராக மாறிய நிழற்கூடம் பயணியர் செல்ல தயக்கம்
-
தி.கோடு அறிவுசார் மையத்தில் குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி