7 பேர் பலியான விபத்து நடந்தது எப்படி?

1

திருநெல்வேலி: நெல்லை அருகே நான்குவழி சாலையில் நடந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட ஏழு பேர் பலியான சம்பவம், அவர்களின் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மைலோடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ், 68; கட்டட மேஸ்திரி. இவர், திருநெல்வேலி அருகே டக்கம்மாள்புரத்தில் வசித்தார்.

இவரது மகன் ஜோபர்ட், 40; திருச்சியில் வங்கி ஒன்றில் பணிபுரிந்தார். விடுமுறையில் ஜோபர்ட், மனைவி அமுதா, 35, மகள்கள் ஜோபினா, 8, ஜோகனா, 8, மகன் ஜோகன், 2, ஆகியோருடன் திருநெல்வேலியில் வசித்த தந்தை வீட்டிற்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் தனிஸ்லாஸ், அவரது மனைவி மார்க்ரெட் மேரி, 60, மற்றும் ஜோபர்ட் குடும்பத்தினர் உட்பட ஏழு பேரும் சொந்த ஊரான தக்கலை சென்று விட்டு, மாலை காரில் திருநெல்வேலிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை தனிஸ்லாஸ் ஓட்டினார். திருநெல்வேலி --- நாகர்கோவில் நான்கு வழிச்சாலை, நாங்குநேரி தெற்கே தளபதிசமுத்திரம் கீழூர் பகுதியில் தனிஸ்லாஸ் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, திருநெல்வேலியில் இருந்து 'இன்னோவா' கார் ஒன்று நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. திருநெல்வேலி மாவட்டம், பழவூர் அருகே கன்னங்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன், 36, அந்த காரை ஓட்டினார்.

காரில் மாரியப்பனின் மனைவி அன்பரசி, 32, மகன்கள் பிரவீன், 10, அஸ்வின், 8 மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணவேணி, 40, அவரது மகள் பிரியதர்ஷினி, 20, மகன் சுபிசந்தோஷ், 18, மற்றும் உறவினர் அக் ஷயா தேவி, பெரியவர் மில்கிஸ், 60, ஆகியோர் பயணித்தனர்.

நேற்று முன்தினம் மாலை, 4:30 மணியளவில் தளபதி சமுத்திரம் கீழூர் அருகே மாரியப்பனின் கார் கட்டுப்பாட்டை இழந்து, மீடியன் மீது மோதி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த தனிஸ்லாஸ் கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில், அந்த காரில் பயணித்த தனிஸ்லாஸ், அவரது மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகிய ஆறு பேர் பலியாகினர். ஜோகனா, 8, நாகர்கோவிலில் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.

இன்னோவா காரிலிருந்த மில்கிஸ் பலியானார். மற்றவர்கள் மீட்கப்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், உறவினர்களிடம், நேற்று பிரேத பரிசோதனைக்கு பின், தனிஸ்லாஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. ஒரே குடும்பத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்தால் மைலோடு கிராமமே சோகத்தில் மூழ்கியது.

ஓவர் லோடு காரணமா?

மாரியப்பன் ஓட்டிய காரில், 9 பேர் இருந்துள்ளனர். முன் சீட்டில் இடது ஓரத்தில் மில்கிஸ், மாரியப்பன் மடியை ஒட்டி ஒரு சிறுவன் அமர்ந்திருந்தனர். சிறுவன் மடியை மறித்து அமர்ந்திருந்ததால் கார் ஓட்ட மாரியப்பன் நெருக்கடியில் சிரமப்பட்டு இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. முன்புற சீட்டில் டிரைவர் உட்பட மூன்று பேர் இருந்ததை, நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள 'சிசிடிவி' கேமராக்கள் வாயிலாக போலீசார் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.அதிக நபருடன் சென்ற மாரியப்பன், அருகிலேயே நெருக்கடியாக சிறுவனையும் உட்கார வைத்துக்கொண்டு கார் ஓட்டியது தான் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.



நாங்குநேரியில் மருத்துவமனை அவசியம்

திருநெல்வேலி -- -நாகர்கோவில் நான்குவழி சாலையில் தளபதி சமுத்திரம் பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. நாங்குநேரியில் நான்கு வழிச்சாலையை ஒட்டி விபத்து சிகிச்சை பிரிவு மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே 7 ஏக்கர் நிலத்தில் தலைமை மருத்துவமனை அமையும் என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தும், நாங்குநேரி காங்., - எம்.எல்.ஏ., தொகுதி என்பதால், அந்த மருத்துவமனை தற்போது சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட வள்ளியூர் அருகே சென்று விட்டது. இதனால் நாங்குநேரியில் பெரிய மருத்துவ மையங்கள் எதுவும் இல்லை.காயமுற்றவர்களை கொண்டு செல்ல மருத்துவமனைகள் இல்லாததால், நாகர்கோவிலுக்கே கொண்டு சென்றுள்ளனர். இதனால், இந்த விபத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது.

Advertisement