நண்பா... நான் இருக்கேன்! பாகிஸ்தான் ஆதரவு: சீனா அறிவிப்பு

காஷ்மீர் பஹல்காமில் ஏப்., 22ல் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பல்வேறு உலக நாடுகள், தாக்குதலை கண்டித்து இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்தன. ஆனால், நமது அண்டை நாடு சீனா நீண்ட இறுக்கத்தில் இருந்தது. பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவுக்கு இந்தியாவுடன் எப்போதும் பகைமை உணர்வு தான் உள்ளது.
நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். ரஷ்யா, சீனா உதவிக்கு வர வேண்டும் என அழைத்தார். இதனால், மனம் குளிர்ந்த சீனா, இப்போது மவுனத்தை கலைத்துள்ளது.
சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் குவோஜியா குன் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி:
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம் தணிய வேண்டும். காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் குறித்து நேர்மையான நடுநிலை விசாரணையை விரைவில் நடத்த வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என இந்தியா தரப்பில் பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் நேர்மையான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட விசாரணை நடத்துவது அவசியம்.
ஆனால், எல்லா காலங்களிலும், எங்கள் நட்பு நாடாக பாகிஸ்தான் உள்ளது. அந்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

