கட்டியும் திறக்காத சுகாதார வளாகம், ரேஷன் கடை

ராஜபாளையம்: கட்டியும் திறக்காத சுகாதார வளாகம், ரேஷன் கடை, வி.ஏ.,ஓ, அலுவலகம் , தேங்கும் கழிவுநீர், சேதமான ரோடு போன்றவற்றால் இளந்திரை கொண்டான் ஊராட்சி மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் இளந்திரை கொண்டான் ஊராட்சியில் பஞ்சம்பட்டி, அம்மையப்பபுரம், அண்ணா நகர் கிராமங்களும் இளந்திரை கொண்டான் தாய் கிராமமாகவும் இருந்து வருகிறது. தளவாய்புரம், கோட்டை இடைப்பட்ட ரோட்டில் ரைஸ் மில்களுக்கு முக்கிய பாதையாக உள்ள இங்கு ஒவ்வொரு ஆண்டும் போடப்படும் சாலைகள் ரைஸ்மில்களுக்கு செல்லும் கனரக வாகனங்களால் விரைவில் சேதம் அடைகிறது.

தாய் கிராமத்தில் ரேஷன் கடை, மகளிர் சுகாதார வளாகம் சேதமடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. குடியிருப்புகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வாறுகால் அகலப்படுத்தாமல் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கிராமத்தில் நுாலகம் இதுவரை அமைக்கப்படவில்லை. குப்பை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மைக்கான தொட்டிகள் அமைத்து செலவு கணக்கை காட்டி வருகின்றனர்.

ரைஸ்மில்களுக்கு வந்து செல்லும் லாரிகள் குடியிருப்பு இடையே செல்வதால் ரோடு சேதம் ஆகி வீட்டின் முன்பு உள்ள குழாய்களும் உடைந்து பாதிக்கின்றன. முறையான பஸ் வசதி இல்லாமல் ஆட்டோவில் பயணிக்க வேண்டி உள்ளது. ரேஷன் கடை சமுதாய கூடத்தில் இயங்கி வருவதுடன் புதிய கட்டடம் காட்சி பொருளாக உள்ளது.

Advertisement