அமெரிக்காவில் பாக்., துாதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்

நியூயார்க்: பஹல்காம் தாக்குதலை கண்டித்து, அமெரிக்காவில் உள்ள பாக்., துாதரகம் முன், இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பாக்., துாதரகம் முன், புலம்பெயர்ந்த இந்தியர்கள் அந்நாட்டுக்கு எதிராகவும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோர், 'பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்' என, முழக்கமிட்டனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பாக்., துாதரகம் முன் குவிந்த பாகிஸ்தானியர்கள், தங்களது நாட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையறிந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள், நம் துாதரகம் முன் அதிகளவில் கூடி, நம் நாட்டுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
பஹல்காம் தாக்குதலை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். இரு தரப்பும் ஒரே சமயத்தில் கூடியதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.