மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மின் துண்டிப்பால் தாய்மார்கள் தவிப்பு

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பழைய புற நோயாளிகள் பிரிவில் வெளி நபர்கள் வந்து தங்குவதால் அப்பகுதியில் மின் துண்டிப்பு செய்துள்ளனர். இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழுக்காக வரும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பழைய புற நோயாளிகள் சீட்டு பதிவு செய்யும் பகுதியில் பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் அறை உள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் வாங்க இங்கு வருகின்றனர்.
பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பங்களை பெற்று இந்தப்பகுதியில் பூர்த்தி செய்து பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் வழங்குகின்றனர். தினமும் நுாறுக்கும் மேற்பட்டோர் இங்கு வருகின்றனர்.
பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுடன் வரும் நிலையில் கடும் வெப்பத்தில் சற்று ஓய்வு எடுக்கவும், குழந்தைகளுக்கு பாலுாட்டியும் வருகின்றனர்.
இந்தப்பகுதியில் வெளி ஆட்கள் ஆக்கிரமித்துள்ளதால் அவர்களை தடுக்க மின்சாரத்தை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் துண்டித்துள்ளது. இதனால் தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வெளி ஆட்களை நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும். மறுத்தால் போலீசாரை கொண்டு அப்புறப்படுத்த வேண்டும். அதனை விடுத்து அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்ததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.