ராமநாதபுரத்தை குளிர்வித்த மழை தாழ்வான இடங்களில் தேங்கிய நீர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நேற்று காலை சிறிது நேரம் மழை பெய்தால் நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் குளிர்ந்த காற்றை அனுபவித்தனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

ராமநாதபுரத்தில் மார்ச் முதல் கோடை வெயில் துவங்கி விட்டது. வெப்ப சலனத்தினால் மக்கள் மதிய வேளையில் வெளியே வருவதை தவிர்த்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் நேற்று வெயில் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10:00 முதல் 11:00 மணி வரை மிதமான மழை பெய்தது.

இதனால் ஓம்சக்திநகர், ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள கீழக்கரை பாலம், பட்டணம்காத்தான், பாரதிநகர், ஓம்சக்திநகர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

கோடை மழையால் நீண்ட நாட்களுக்கு பின் குளிர்ந்த காற்றை மக்கள் அனுபவித்தனர்.

*திருவாடானை, தொண்டியில் நேற்று மதியம் ஒரு மணி நேரம் இடியுடன் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. வெயில் தாக்கம் குறைந்தது.

கோடை உழவிற்கு இந்த மழை பயனாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். திருவாடானை வாரச்சந்தையில் வியாபாரிகள் மழையை தாக்கு பிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

Advertisement