மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள் அதிகரிப்பு

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை, பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை இருவழிச்சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த ரோட்டில் தினமும்ஆயிரத்திற்கும் மேற்பட்டவாகனங்கள் சென்று வருகிற நிலையில் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தியிலும், பரமக்குடி அருகே சத்திரக்குடியிலும் டோல்கேட் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு முன் நான்கு வழிச்சாலை ஆணைய அதிகாரிகளின் சரியான திட்டமிடல்இல்லாததால் மானாமதுரையில் ரோட்டை ஒட்டி புது பஸ் ஸ்டாண்ட் இருந்த போதிலும் அதற்கு அருகில் பைபாஸ் ரயில்வே கேட் மேம்பாலம் பஸ் ஸ்டாண்டை தாண்டி வரை அமைக்காமல் பஸ் ஸ்டாண்டுக்கு முன்னதாகவே மேம்பாலத்தை முடித்துக் கொண்டதால் நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக வாகனங்கள்வரும்போது இரு மார்க்கங்களிலும் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து நிரந்தரமாக ஊனமடைந்துள்ளனர்.
இதே போன்று முத்தனேந்தலில் ரோட்டின் இரு புறங்களிலும் சர்வீஸ் ரோடு இதுவரை முழுமை பெறாமலும்,பஸ் ஸ்டாப் அமைக்கப்படாததால் நான்கு வழிச்சாலையிலேயே பயணிகள் ஏற்றி, இறக்கப்படுவதால் அங்கும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கமுதியில்இருந்து சமயபுரம் சென்ற வேன் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மானாமதுரை அருகே வளநாடு விலக்கு ரோடு அருகிலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகிவருவது தொடர்கதையாக அமைந்துஉள்ளது.
நான்கு வழி சாலை ஆணைய அதிகாரிகள் இந்த ரோட்டில் ஆய்வு செய்து விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
