செம்பூர் விலக்கில் பஸ் நிறுத்தம் கலெக்டரிடம் கோரிக்கை
சிவகங்கை: அரசனுார் அருகே செம்பூர் விலக்கில் அனைத்து புற நகர் பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என கிராமத்தினர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.
அரசனுார் அருகே செம்பூர், செம்பூர் காலனி, கண்ணாரிருப்பு, தனியார் கல்லுாரி, மில்கள், மாணவர் ஸ்கேட்டிங் சென்டர் உள்ளிட்டவை உள்ளன. கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000 பேர் வரை வசிக்கின்றனர். இவர்கள் பஸ்சில் மதுரை - சிவகங்கைக்கு சென்று வர 3 கி.மீ., துாரமுள்ள திருமாஞ்சோலை வரை சென்று பஸ் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அனைத்து டவுன் , புறநகர் பஸ்களும் செம்பூர் விலக்கில் நின்று செல்ல வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை வைத்தனர்.
ஏப்.,21 அன்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் மனு அளித்தனர். அவர் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கலெக்டர் உத்தரவுபடி செம்பூர் பஸ் நிறுத்தம் என கிராம மக்கள் அங்கு பெயர் பலகை வைத்துஉள்ளனர். ஆனால், எந்த பஸ்களும் அங்கு நின்று செல்வதில்லை.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, தனக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என கூறிவிட்டார். இதையடுத்து அதிருப்தியான செம்பூர் கிராம மக்கள் நேற்று 2 வது முறையாக கலெக்டரிடம், பஸ் நிறுத்த கோரி புகார் மனு அளித்தனர்.