வீடுகளுக்குள் திரும்பும் சாக்கடை கழிவு காரைக்குடி மாநகராட்சி மக்கள் கொதிப்பு
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க ரூ. 20 ஆயிரம் வழங்கியும் பயனின்றி, சாக்கடை நீர் மீண்டும் வீடுகளுக்குள் திரும்புவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 26 மற்றும் 27வது வார்டில்பாதாள சாக்கடை இணைப்பு பணி நடந்தது.
வீடுகளுக்கு இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்தும் முறையாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். இணைப்பு கொடுத்த வீடுகளுக்குள் பாதாள சாக்கடை கழிவு திரும்புவதோடு பெருக்கெடுத்து சாலையில் ஓடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சொக்கலிங்கம் கூறுகையில், மாநகராட்சியினர்பாதாள சாக்கடை இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் கேட்டதால் இரு தவணையாக வழங்கினேன். முறையாக அமைக்கப்படாததால் பாதாள சாக்கடை தண்ணீர் வீடுகளுக்குள் திரும்புகிறது. சரி செய்ய பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இணைப்பு வழங்க பணம் கொடுத்தும் முறையான ரசீதும் வழங்கவில்லை.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 26, 27வது வார்டிற்குட்பட்ட சில பகுதிகளில் முன்பு பெய்து தொடர் மழை காரணமாக குழாய் துார்ந்து போய் உள்ளது. அதனை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. முறையாக இணைப்பு சரி செய்யப்படும் என்றனர்.