கள்ளழகரை வரவேற்க பாடல் வெளியீடு

மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா குறித்தும், கள்ளழகர் குறித்தும் பாடப்பட்ட பாடல்கள் இன்றும் மவுசு குறையாமல் உள்ளன. அந்த வகையில் மதுரை புதுாரைச் சேர்ந்த சதீஷ், இந்தாண்டு கள்ளழகரை வரவேற்று சொந்த செலவில் பாடல் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

சினிமா பாடலாசிரியர் கருமாத்துார் மணிமாறன் எழுதிய 'குதிச்சு வாராரு... குதிரை ஏறி வாராரு...' என்ற பாடலுக்கு தன்ராஜ் மாணிக்கம் இசையமைத்து பாடியுள்ளார்.

சதீஷ் கூறியதாவது: கடந்தாண்டே என் சொந்த முயற்சியில் பாடல் வெளியிட வேண்டும் என எண்ணினேன்.

அதற்கான வாய்ப்பு இந்தாண்டுதான் அமைந்தது. கள்ளழகரை வர்ணித்தும், வரவேற்றும் எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன.

அந்த வரிசையில் நான் தயாரித்து வெளியிட்ட பாடலும் இடம்பெற்றுள்ளது எனக்கு பெருமையாக உள்ளது. நேற்றுமுன்தினம் யுடியூப்பில் (மதுரை வாசி) வெளியிட்ட சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோரிடம் சென்று சேர்ந்துள்ளது. இந்த பாடலை கள்ளழகர் குதிரை வாகனத்துடன் வரும் பாலாஜி பட்டர் வெளியிட்டார்.

இந்தாண்டு வர்ராரு வர்ராரு அழகரு வர்ராரு, சித்திரை கொடி பறக்க... பாடல்களுடன் 'குதிச்சு வாராரு... குதிரை ஏறி வாராரு...' பாடலும் மக்கள் பாடப்போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

Advertisement