இன்ஸ்டாகிராமில் பிரிவினைவாத அவதுாறு: போலீசார் வழக்கு
மூணாறு: பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கேரளாவை சேர்ந்தவர் குறித்தும், நாட்டை குறித்தும் அவமதிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டவருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22ல் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளி மாமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் இறந்தார்.
அவரது மகள் சம்பவம் குறித்து தனியார் மலையாள தொலைக்காட்சியில் விவரித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதனை அவமதிக்கும் வகையிலும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் 'முஹ்- அனுப்' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிடப்பட்டது. இதுகுறித்து யுவமோர்ச்சா அமைப்பின் மாநில செயலாளர் அதினபாரதி, இடுக்கி மாவட்டம் முட்டம் போலீசில் புகார் அளித்தார். மதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை துாண்டுதல், மோதல் ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.